மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, August 18, 2010

வாரி வழங்குவோம்...


நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி, வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமலான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி. 1902

ரமளான் மாதத்தில் பெருமானார்(ஸல்) அவர்கள் சடைவடையாமல் தர்மம் செய்யக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதால் தான் மழைக்காற்றை விட வேகமாக வாரி வழங்குவார்கள் என்ற உதாரணத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் வர்ணித்துக் கூறி இருக்கின்றார்கள்.

புனித ரமளான் மாதத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்க முன் வரவேண்டும்.அவ்வாறு தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்குவதால் நம் பொருளாதாரம் ஒருப்போதும் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும் திருமறை வசனத்தில் கூறுகின்றான்.

2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது,

1.தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது.

2.தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.


மேற்காணும் இரண்டு நற்பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கீழ்காணும் விதம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் விஷயத்தில் ஏவியவைகளை செய்யவேண்டும், தடுத்தவைகளை தடுத்துக் கொள்ள வேண்டும்.

ரமளான் மாதத்தில் சடைவடையாமல் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் உதவிக் கேட்டு வந்தவர்களை எதாவது ஒருக் காரணத்தைக் கூறி திருப்பி அனுப்பியதில்லை.உதவி கோரியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து அனுப்புவார்கள் அவர்களிடத்தில் கொடுத்து உதவ ஏதுமில்லை என்றால் உதவிக் கோரியவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் தோழர்களிடத்தில் சென்று இவர்களுக்கு இயன்றளவு உதவி செய்யுங்கள் என்று பரிந்துரை செய்வார்கள்.

ஒருக் குழுவாக உதவி கேட்டு வந்தால் மிம்பரில் ஏறி நின்று மக்களை அழைத்து தான தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டும் திருமறைக் குர்ஆன் வசனங்களை எடுத்துக்கூறி உருக்கமாக உரை நிகழ்ததி மக்;களின் உள்ளங்களை அந்த ஏழைகளின் மீது ஈர்க்கச் செய்து விடுவார்கள்.சிறிது நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளதை கொண்டு வந்து கொட்டி அவர்களின் பையை நிறைத்து அனுப்புவார்கள்.

நபி(ஸல்)அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய)நாவினால் நிறைவேற்றித் தருவான் எனக்கூறினார்கள். 1432. அபூமூஸா(ரலி) அறிவித்தார்.

இன்று நம்மில் பலர் கை வசம் எதுவும் இருந்தால் கொடுத்து உதவுகிறோம்,கை வசம் எதுவும் இல்லை என்றால் இல்லை என்றுக் கூறி ஒதுங்கி விடுகிறோம்,நம்மிடம் இருப்பு இல்லை என்றாலும் உதவிக் கோரி வந்தவர்களை நம்முடைய நண்பர்களிடம், உறவினர்களிடம், அல்லது உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்ய வேண்டும், அவர்களிடமும் எதுவும் கிடைக்க வில்லை என்றால் தொண்டு நிருவனங்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்;ய வேண்டும். இவ்வாறான எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நபி வழி.

இவ்வளவு தான் என்ற வறையரை.இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று வறையருத்துக் கொடுப்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நம்முடைய பொருளாதாரத்தில் ஏற்படும் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக அமையும்.

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி) அறிவித்தார்கள் நூல் புகாரி 1433.

தடுத்துக் கொண்டால் ?

கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது. 1444 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

படிப்பினைகள் :

அல்லாஹ்வுக்காகவென்ற சிந்தனையில் தானதர்மம், மற்றும் தஃவாப் பணிகளுக்கு வாரி வழங்கினால் வாரி வழங்குபவர்களின் பொருளாதாரத்தை அல்லாஹ் பல்கிப் பெருகச் செய்வான்.இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் இதற்கு மேல் முடியாது என்று சிறயளவில் வழங்கினாலும், அதே அளவே அல்லாஹ்வும் வழங்குவான். கூடுதல் அபிவிருத்தயை எதிர் பார்க்க முடியாது.

கொடுக்காமல் தடுத்துக் கொண்டால் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும்.
நோன்பு அல்லாஹ்வுக்குரியது என்று அல்லாஹ் கூறுவதால் அல்லாஹ்விற்காக நோன்பு நோற்றிருக்கும் புனித ரமளான் மாதத்தில் தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்கும் தியாகப் பணியில் ஈடுபட்டால் அவற்றிற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்குவான்.

புனித ரமளான் மாதத்தில் அண்ணலார் அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நாமும் நம்மால் இயன்ற அளவு தர்மம் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம்.


------------------------
நன்றி :அதிரை ஏ.எம்.பாரூக்

Thursday, August 12, 2010

ரமலான் முதல் பத்தின் சிறப்புகள் !


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில்
முதல் பத்தில் செய்யவேண்டிய மிக முக்கியமான அமலை இந்த ஆக்கத்தில்
பார்க்கவிருக்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின்
'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும்
பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்'
மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
ஆதார நூல்; இப்னு குஜைமா எண் 191 .

இந்த பொன்மொழியில் நபி[ஸல்] அவர்கள் ரமலானை மூன்றாக பிரித்து அந்த மூன்றிலும்
மிக முக்கியமான பலன்கள் இருப்பதை சொல்லிக்காட்டுகிறார்கள். அந்த பலன்களை அடைய நாம் செய்யவேண்டியது என்ன?

"முதல்பத்தில் இதுவரை நாம் அடைந்த அருட்கொடைக்கு நன்றி கூறுவதும், அல்லாஹ்வின் அருளை வேண்டுவதும்."

நமது நம் முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ் உங்களுக்கு செய்த அருட்கொடை என்ன என்று கேட்டால் செல்வத்தைத்தான் சொல்லிகாட்டுவார்கள். பெரிய பங்களாவை எழுப்பி விட்டு அதன் நெற்றியில் 'இது என் இறைவனின் அருட்கொடை'என்று எழுதியிருப்பார்கள். அப்படியாயின் இதுவரை அவர்கள் வாழ்வில் அனுபவித்த எதுவும் அவர்களுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.

* மாட மாளிகைகளில் வாழ்பவர்களில் பலர் மன நிம்மதியின்றி உறக்கமின்றி
தவித்தபோது இவன் குடிசையில் சுகமாக உறங்கினானானே அந்த அருட்கொடை இவனுக்கு பெரிதாக தெரியவில்லை.
* எத்துணையோ பேர் வீடின்றி ரோட்டிலே வாசம் செய்துகொண்டிருந்தபோது இவனுக்கு
ஒரு கூட்டை தந்தானே இறைவன்.அது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
* பெட்டி பெட்டியாக பணமும்- கட்டி கட்டியாக தங்கமும் வைத்துள்ள ஒரு
செல்வந்தன் ஆங்கில எழுத்தில் உள்ள அத்துணை நோய்களையும் தாங்கி
அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது அன்றாடம் காய்ச்சியான இவன் காய்ச்சல் கூட இன்றி இருந்தானே அது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
* அத்துணை வசதிகள் இருந்தும் வெறும் கூழ் மட்டுமே குடிக்கவேண்டிய
நிர்ப்பந்தத்தில் பல செல்வந்தர்கள் இருக்க, சின்ன எலி முதல் பென்னம்பெரிய
பிராணியையும் முழுங்கிவிட்டு இருமுறை தரையில் புரண்டுவிட்டு பின்பு சாவகாசமாக
ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு போல், சாதாரண கஞ்சி முதல் கனமான ஒட்டக இரைச்சிவரை கிடைத்ததை உள்ளே தள்ளி விட்டு 'ஏவ்' என்று ஏப்பமிட்டு சாதாரணமாக இவன் வாழ்ந்தது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.எது மட்டும் அருட்கொடையாக தெரிகிறது எனில் செல்வம் மட்டுமே அருட்கொடையாக
தெரிகிறது. செல்வமும் அல்லாஹ்வின் அருட்கொடைதான். ஆனால் அதுமட்டுமே அருட்கொடை என்று எண்ணிவிடக்கூடாது.

அல்லாஹ் நமது உடலில் அமைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அருட்கொடைதான். 'நிழலின் அருமை வெயிலில் இருந்தால்தான் தெரியும்' என்பார்கள். அதுபோன்று முழுமையான உடலமைப்பை பெற்ற ஒருவனுக்கு அவனது உறுப்புகளின் மகிமை புரிவதில்லை. நம்முடைய ஒவ்வொரு உறுப்பும் எப்படிப்பட்ட அருட்கொடை என்று புரிய வேண்டுமெனில், மாற்றுத் திறனாளிகளிடம் கேட்டால் தெரியும். கண் இன்றி அவர்கள் படும் கஷ்டங்கள்-செவிப்புலன் இன்றி அவர்கள் படும் துன்பங்கள்- பேசும் புலன் இன்றி அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள்- பிடிக்க கையின்றி, நடக்க கால்களின்றி அவர்கள படும் பாடுகள். இதையெல்லாம் நாம் கவனித்துப்பார்த்தால் அல்லாஹ் நமக்கு எப்படியெல்லாம் தனது அருளை வாரி வழங்கியிருக்கிறான் என்பதை புரிந்துகொள்ளலாம். செல்வம் மற்றும் நம் உடலமைப்பு மட்டுமன்றி,

* ஒரு பெற்றோருக்கு அவர்களின் பெயரை காக்கும் வகையில் ஸாலிஹான குழந்தை
கிடைப்பது அல்லாஹ்வின் அருட்கொடை.
* பிள்ளைகளுக்கு இஸ்லாமிய நன்னெறி போதித்து வளர்க்கும் பெற்றோர் கிடைப்பது
அல்லாஹ்வின் அருட்கொடை.
* ஒரு கணவனுக்கு மார்க்கத்தை கற்ற சிறந்த மனைவி அமைவது அல்லாஹ்வின்
அருட்கொடை.
* ஒரு பெண்ணுக்கு மது-மாது-சூது-புகை-சினிமா உள்ளிட்ட தீமைகளை செய்யாத
இறையச்சமுடைய கணவன் அமைவது அல்லாஹ்வின் அருட்கொடை.
* கடுகளவும் பெருமையின்றி, சுயநலமின்றி சமுதாயத்தின் நலம் காக்கும் ஒரு
வழிகாட்டி அமைவதும் அல்லாஹ்வின் அருட்கொடை.
* முட்டாள்களுக்கு மத்தியில் கற்றவனின் கல்வி அதிலும் குறிப்பாக இஸ்லாமிய
கல்வி அல்லாஹ்வின் அருட்கொடை.
* இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாம் முஸ்லிம்களாக பிறப்பதற்கும்,
வாழ்வதற்கும் அல்லாஹ் அருள் புரிந்தானே இது மிகப்பெரிய அருட்கொடை.
எப்படியெனில், உலகில் உள்ள அத்த்துனை பெரிய கல்விகளையும் கற்று, நாட்டின் மிக உயர்ந்த பதவியில் வீற்ற போதும் தன்னை படைத்த அந்த பரம்பொருளை அறியும் அந்த பகுத்தறிவில்லா முட்டாள்களாக பலகோடி பேர் இருக்கும் நிலையில், ஏட்டுப்படிப்பை ஊறுகாய் அளவுக்கு கற்ற இந்த முஸ்லிம் சமுதாயம் தன்னுடைய இறைவன் யார் என்பதை தெளிவாக விளங்கிவைத்துள்ளதே! கல்லையும்-மண்ணையும்-மரத்தையும்-பாம்பையும்-பல்லியையும் இப்படி மனிதனை விட கீழான படைப்புகளை இறைவனாக கருதி வழிபடும் மக்களுக்கு மத்தியில், இறைவன் யார்? அவன்
வல்லமை என்ன? என்பதை விளங்கி அவனை தவிர வேறு எந்த படைப்பினங்களுக்கும்
தலைவனங்கமாட்டோம் என்று அறுதியிட்டு உறுதியாக சொல்லும் நெஞ்சுரத்தை தந்தானே வல்ல ரஹ்மான். இதுதான் மிகப்பெரிய அருட்கொடை.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்
செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு)இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1.
ஆரோக்கியம். 2. ஓய்வு

ஆதாரம்;புஹாரி எண் எண் 6412 .

இந்த பொன்மொழியில் நபி[ஸல்] அவர்கள் இரு முக்கியமான அருட்கொடை பற்றி
கூறுகிறார்கள். ஆரோக்கியம் என்பது ஒரு அருட்கொடை. அந்த ஆரோக்கியத்திற்கு கேடு
விளைவிவிக்கும், மது-மாது-புகை போன்ற தீய பழக்கவழக்கங்களை விட்டொழிக்க வேண்டும்.மேலும், உழைப்பிற்கு ஏற்ப உடம்பிற்கு ஓய்வும் அளிக்கவேண்டும் . ஒய்வு என்ற பெயரில் சினிமா-டிராமா-கிரிக்கெட்-சூதாட்டம் போன்ற தீமைகள் செய்வதையும்
தவிர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே அன்பானவர்களே! இதுவரை இறைவன் நமக்களித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம். இனியும் அவனது அருள் நிழலில் வாழ இந்த புனித ரமலானின் முதல் பத்தை பயன்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.


நன்றி :TMB

Tuesday, August 10, 2010

ஏடிஎம் திருட்டு கும்பல் நூதன கைவரிசை... உஷார் !!!


ஏடிஎம் பணம் கொள்ளையடிக்க பசை, நகம்வெட்டி போதுமாம்..

அடுத்த முறை நீங்க ஏடிஎம்மில் பணம் எடுக்க நுழைந்ததும், எந்திரத்தின் பட்டன்களில் ஏதாவது அழுந்தியிருக்கிறதா என்பதை கவனியுங்க. பசை, ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டி பயன்படுத்தி உங்கள் பணத்தை திருடர்கள் கொள்ளையடிக்க கூடும்.அதில் லேட்டஸ்ட் டெக்னிக் இதோ:

கணக்கில் பணம் இல்லாத ஒரு டெபிட் கார்டை கதவில் இருக்கும் கருவியில் நுழைத்து உள்ளே நுழைவார் மிஸ்டர் திருடர். கார்டை உள்ளே செலுத்த தேவையில்லாத, செருகிவிட்டு வெளியே எடுத்து விடும் வசதியுள்ள ஏடிஎம்களே அவரது குறி.(எஸ்பிஐ, பிஓபி உட்பட அரசு, தனியார் வங்கிகள் சிலவற்றில் இந்த வகை ஏடிஎம்களே உள்ளன)
ஏடிஎம் கீபோர்டில் ஒரு பட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் அது மேலே வராமல் பட்டன்களுக்கு இடையே பசையை தடவி ஒட்டி விடுவார். பட்டனை அழுத்தியதும் மெஷின் ஆன் ஆகிவிடும். பிறகு, வெளியேறி விடுவார் மிஸ்டர் திருடர்.

அடுத்த அப்பாவி உள்ளே வருவார். திரையை கவனிக்காமல் நேராக கார் டை தேய்த்து வெளியே எடுப்பார்.பின் நம்பர் கேட்கும்.பட்டனை அழுத்துவார்.ஏற்கனவே ஒரு பட்டன் அழுத்தப்பட்டிருப்ப தால் பாதுகாப்பு அம்சங்களின்படி தவறான டிரான்சாக்ஷனாக கருதி ஸ்கிரீன் ஆப் ஆகிவிடும்.

அடுத்ததாக காத்திருக்கும் மிஸ்டர் திருடர், ‘எவ்ளோ நேரம் சார். வெளி யே வாங்க, நாங்க போனதும் டிரை பண்ணுங்க’ என்று சத்தம் கொடுப்பார்.அப்பாவி வெளியேறியதும், உள்ளே நுழையும் மிஸ்டர் திருடர், கையடக்கமான ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டியால் பசையுள்ள பட்டனை ரிலீஸ் செய்வார். ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகும். ஏற்கனவே டைப் செய்யப்பட்ட கடைசி பின் நம்பர் மெமரியில் இருக்கும் என்பதால், எவ்வளவு வேண்டுமோ பணத்தை குறிப்பிட்டு எடுத்துக் கொண்டு ஜென்டிலாக வெளியேறுவார் மிஸ்டர் திருடர்.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது உஷாராக இருங்கள்...

Sunday, August 8, 2010

என்று மாறும் இந்த அவல நிலை???


ஈமானுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் பாவக்கறைகளை அகற்றி புனித மாதத்தில் அமல்களை அதிகம் செய்யவே ஆசைப்படுவான்.ஆனால் அரசியல் சாக்கடைக்குள் சங்கமமான இந்த மனிதர்கள் ரமழானை எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் படங்களோடு வரவேற்கும் பரிதாப நிலையை இந்தப் படம் சித்திரிக்கிறது...என்று மாறும் இந்த அவல நிலை???


நன்றி :நாஷித் அஹமத்

Monday, August 2, 2010

சவுதி அரேபியாவில் தமுமுக-வின் 40வது செயற்குழு கூட்டம்


தம்மாம் : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக சவூதி அரேபிய கிழக்கு மாகாண அமைப்பின் 40வது செயற்குழு கூட்டம் ஜூலை 30ம் தேதியன்று தம்மாம் நகரில் நடைப்பெற்றது. கிழக்கு மண்டல துணை தலைவரும் ஊடகத்துறை பொறுப்பாளருமாகிய சகோ.அப்துல் காதர் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். தம்மாம் நகர தமுமுக தலைவர் சகோ.இப்ராஹிம்ஷா வரவேற்புரை நிகழ்த்தினார். சகோ.அப்துல் காதர் தனது தலைமை உரை நிகழ்த்தினார்.

கிளை வாரியான ஆய்வினை மண்டல பொதுச்செயலாளார் சகோ.செய்யத் இஸ்மாயில் மேற்கொண்டார். சகோ. ஷஹாபுதீன் (அல்ஹஸா), சகோ.அஜிஸ் ரஹ்மான் (அப்கேக்), சகோ. நிஸார் (ஜுபைல்), சகோ. சலீம் கான் (ரஹீமா), சகோ. ஷாஹுல் ஹமீது (ஷிஹாத்), சகோ.ஹாஜா மெய்தீன்(அல்கோபார்), சகோ.இப்ராஹிம்ஷா (தம்மாம்) ஆகியோர் தங்களது கிளைகளில், கடந்த மண்டல செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் நடைப்பெற்ற நிகழ்ச்சிகள், உறுப்பினர் சேர்க்கை, போன்ற விவர அறிக்கையினை கூட்டத்தில் தாக்கல் செய்தனர். சிறந்த கிளைகளாக ஜுபைல், அல்கோபார் ஆகியவை அறிவிக்கப்பட்டது.

ஜும்ஆ பேருரையினை ஜுபைல் நகர தலைவர் சகோ.ஷரீப் பாகவி நிகழ்த்தினார். இறைத்தூதர் நபிகளின் (ஸல்) வாழ்வு முறையினை ஒவ்வொருவரும் தம் வாழ்வில் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டார். ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் தொடங்கிய இரண்டாவது அமர்வில் சகோ.நிசார் அலி ஆளுமைத்திறன் குறித்து பேசினார். தொடர்ந்து பேச்சு திறனுக்கான குறிப்புகளை மண்டல துணைச் செயலாளர் சகோ.அப்கேக் அப்துல் அலீம் வழங்கினார்.

தாயகத்திலிருந்து அலைப்பேசி வழியாக உரை நிகழ்த்திய தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் முனைவர். ஜவாஹிருல்லாஹ் நோன்பின் மாண்பினையும், படிப்பினையும் குறித்து பேசியதோடு “தமுமுக மற்றும் ம.ம.க பணிகள் இன்னும் வலுப்படுத்திட ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்றார், தொடர்ந்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிக்கையினையும், மண்டல் பொருளாளர் சார்பில் நிதி நிலை அறிக்கையினையும் சகோ.இம்தியாஸ் புஹாரி சமர்பித்தார். இறுதியாக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவிதின் பாகவி சிறப்புரையாற்றியனார். சகோ. சீனி முஹம்மது நன்றியுரையாற்றினார். கூட்டத்திற்கான அரங்க, மற்றும் உணவு ஏற்பாடுகளை சகோ.இப்ராஹிம்ஷா தலைமையில் தம்மாம் நகர தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

----------------------
நன்றி : ஹம்துன் அப்பாஸ்