மக்கள் உரிமை படியுங்கள்

Tuesday, February 2, 2010

சிவசேனை மீது ராகுல் கடும் தாக்கு


தமக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேக்கு பதிலடி தரும் வகையில் பிகார் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

"மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிட்ட என்எஸ்ஜி படையில் பிகார், உத்தரப் பிரதேசம், குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் இருந்தனர். அந்த நேரத்தில் பிகார், உத்தரப் பிரதேசம் போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் சிவசேனை கூறவில்லை" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயரிழந்த உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சேர்ந்த வீரர்களின் தியாகத்தை மட்டும் உரிய முறையில் அங்கீகரித்திருப்பது, மராத்திய வீரர்களை புண்படுத்தும் செயலாகும் என சிவசேனையில் சாம்னா பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த ராகுல், "இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது. பால் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரேயின் கோணத்தில் இதை நான் பார்க்கவில்லை" என்றார்.

"நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை மகாராஷ்டிரத்துக்குள் நுழையவிடாமல் தடுக்கும் விஷயத்தில் நான் இனியும் மௌனமாக இருக்கப் போவதில்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.