மக்கள் உரிமை படியுங்கள்

Monday, November 29, 2010

பீகார் சட்டசபையில் முஸ்லீம் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 19 மட்டுமே..


பாட்னா: இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிக்காக ஒவ்வொரு கட்சியும் கடுமையாக போட்டி போட்ட போதிலும், பீகார் சட்டசபையில் வெறும் 19 முஸ்லீம் எம்.எல்.ஏக்களே இடம் பெற்றுள்ளனர்.பீகார் மாநிலத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 16.5 சதவீதமாகும், அதிகமாக இருக்ககூடிய வாய்ப்பு இருக்கிறது.. இதை ஒப்பிட்டுப் பார்த்தால் 50 எம்.எல்.ஏ-கள் இருக்க வேண்டும் , 19 என்பது மிக மிக குறைவாகும்.

இத்தனைக்கும் ஒவ்வொரு கட்சியும் நிறைய முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். ஆனால் ஜெயித்து வந்தவர்கள் வெறும் 19 பேர் மட்டுமே. இருப்பினும் கடந்த சட்டசபையில் 16 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது 3 பேர் அதிகரித்துள்ளது ஓரளவு ஆறுதல் தருவதாக உள்ளது.இந்த 19 பேரில் ஏழு பேர் ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு 6 பேரும், காங்கிரஸுக்கு 3 பேரும், பாஸ்வான் கட்சிக்கு 2 பேரும், பாஜகவுக்கு ஒருவரும் கிடைத்துள்ளனர்.

முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருப்பது அச்சமுதாயத்தினரிடையே பெரும் கவலை அலைகளை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம்களை பெருமளவில் வாக்களிக்க வைப்பதில் சமுதாயத் தலைவர்கள் அக்கறை காட்டுவதில்லை, அதனால்தான் முஸ்லீம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தேய்ந்து கொண்டே போவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒற்றுமையாக இருந்து வாக்களிப்பதன் அவசியத்தை முஸ்லீம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே முஸ்லீம்களின் வாக்குகள் சிதறாமல், வேறு வேட்பாளர்களுக்குப் போகாமல் முஸ்லீம் வேட்பாளர்கள் அதிகஅளவில் வெற்றி பெற வழி வகுக்கும் என்பது முஸ்லீம் சமுதாயத்தினரின் கருத்தாகும்.

இதுகுறித்து பாஸில் ராப் என்பவர் கூறுகையில், முஸ்லீம்களிடையே வாக்களிக்கும் சதவீதம் மிக மிக குறைவாக உள்ளது. அதுவே இந்த நிலைக்குக் காரணம். முஸ்லீம்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்த முஸ்லீம் தலைவர்கள் தவறி விட்டனர். இது வருத்தத்திற்குரியது என்றார்.

புதிதாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இஸார் அகமது கூறுகையில், முஸ்லீம்கள் வாக்களிக்கும் சதவீதம் 30 முதல் 40 சதவீதமாகவே உள்ளது. இதுவே 50 அல்லது அதற்கு மேலாக இருந்திருந்தால் குறைந்தது 24 பேராவது கூடுதலாக தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள்.நடந்து முடிந்த தேர்தலில் 35 முஸ்லீம் வேட்பாளர்கள் 2வது இடத்தைப் பிடித்தனர். அவர்களில் பலர் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக லாலு கட்சியின் பரஸ் பாத்மி என்பவர் வறும் 29 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார் என்றார்.

கட்சிகளைப் பொறுத்தமட்டில் அதிக அளவிலான முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்திய கட்சி காங்கிரஸ்தான். மொத்தம் 48 பேரை அது நிறுத்தியிருந்தது. ஆனால் வென்றது 3 பேர்தான்.

லாலு கட்சி சார்பில் 28 பேரும், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் 15 பேரும் நிறுத்தப்பட்டனர். பாஸ்வான் கட்சி 12 பேருக்கு வாய்ப்பளித்தது. இதில் ஐக்கிய ஜனதாதளம் (3), காங்கிரஸ் (2), லாலு (1), பாஸ்வான் (1) ஆகிய கட்சிகள் மொத்தமாக 7 முஸ்லீம் பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.