மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, July 7, 2010

ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன், ஜெர்மனி விமான நிலையங்கள் மறுப்பு.


ஈரான் நாட்டு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன்,ஜெர்மன், குவைத் நாட்டு விமான நிலையங்கள் மறுத்துள்ளன. அணு ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் ஈரானை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல வழிகளில் முயன்று வருகின்றன. பொருளாதார, தொழில்நுட்ப, பாதுகாப்பு, வர்த்தகத் தடைகள் விதித்தாலும் ஈரானின் அணு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

இந் நிலையில் ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் இல்லை என்று கூறி அடுத்த ஆயுதத்தை பிரயோகம் செய்துள்ளன இந்த நாடுகள்.இதன்மூலம் ஈரான் நாட்டு விமானத்துறையை சீர்குலைக்கவும்,அதன் வருவாயைத் தடுக்கவும் முயற்சி செய்யப்படுவதாகத் தெரிகிறது.ஈரான் மீதான இந்த விமான எரிபொருள் தடைக்கு மேலும் பல நாடுகளின் ஆதரவைப் பெறவும் முயற்சி நடக்கிறது.

அதே போல ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என்று ஐரோப்பாவில் உள்ள தனது பெட்ரோலிய பங்குகளுக்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் ஷெல் நிறுவனம் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளன.தங்களது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என்று ஈரான் ஏர்லைன்ஸ் யூனியனின் செயலாளர் மெஹ்தி அலியாரி கூறியுள்ளார். இதற்கிடையே தங்கள் விமானங்களுக்கு தடை விதித்த நாடுகளின் விமானங்கள், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப மாட்டோம் என்று ஈரான் நாட்டு மூத்த அரசியல் தலைவரான ஹெஸ்மதுல்லா பலாஹத்பிசே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்க காங்கிரஸ் கொண்டு வந்த மிகக் கடுமையான தீர்மானத்தில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டார்.அதன்படி,ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கலாம்.

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் வலியுறுத்தல்.


தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில்,முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நடந்தது.மாநாட்டின் முதல் நிகழ்வாக, முஸ்லிம்கள் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி, சென்னை புதிய தலைமைச் செயலகம் அருகே துவங்கி, தீவுத்திடலில் முடிந்தது.

தீவுத்திடலில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது: நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளதை குஷ்வந்த்சிங் போன்ற சிந்தனையாளர்கள் வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அதை முஸ்லிம் மதகுருமார்கள் புறக்கணித்தனர்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆங்கிலேயர் வழங்கிய வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் மறுத்தனர். தாங்கள் வகித்து வந்த உயர் பதவிகள் மற்றும் ஆங்கிலேயர் கொடுத்த சர் ராவ்பகதூர் போன்ற பட்டங்களையும் புறக்கணித்தனர்.

கடந்த 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது.கடந்த ஆண்டு, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, நாட்டில் உள்ள 13 சதவீத முஸ்லிம்களுக்கு, கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இப்பரிந்துரையை உடனடியாக சட்டமாக்க வேண்டும்.இதுதொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ஜெய்னூல் அபிதீன் பேசினார்.