மக்கள் உரிமை படியுங்கள்

Monday, February 1, 2010

புலிகள் இயக்க சிறுவர்கள் 56 பேர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


கொழும்பு:விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த 56 சிறுவர்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இலங்கையில் ராணுவத்தை எதிர்த்து சண்டையிட சிறுவர்கள் பலர் புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர். புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின் ஏராளமான புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர்.

அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிய சிறுவர்கள் பலர் வெளிகண்டா என்ற இடத்தில் உள்ள நவசேனாபுரா சீர்த்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 56 பேரை இலங்கை ராணுவம், அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தது.இலங்கை ராணுவத் தளபதி ரத்னாயகே முன்னிலையில் இந்த 56 சிறார்களும் பெற்றோரிடம் பாசமிகுதியில் ஒன்று சேர்ந்தனர்.

பிரபாகரன் மரணத்திற்கான ஆதாரம் சிபிஐ.,யிடம் உள்ளது: ப.சிதம்பரம்



புதுதில்லி, பிப்.1- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தது தொடர்பான ஆவணங்கள் சிபிஐ.,யிடம் இலங்கை அரசு அளித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரபாகரனின் மரணத்தை உறுதிபடுத்தும் ஆவணங்களை இலங்கை அரசு தங்களிடம் அளித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர் என்று ப.சிதம்பரம் கூறினார்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மனு ஒன்றுக்கு ஜனவரி 27ம் தேதி பதில் அளித்த சிபிஐ அதிகாரி பி.என். மிஸ்ரா 'பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை' என்று கூறியிருந்தார்.

பூகம்பம் பாதித்த ஹைதியில் குழந்தைகளை கடத்திய 10 அமெரிக்கர்கள் கைது


போர்ட் ஆப் பிரின்ஸ், பிப். 1:
பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஹைதி தீவிலிருந்து 33 குழந்தைகளை கடத்திச் செல்ல முயன்றதாக 10 அமெரிக்கர்களை ஹைதி போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் ஹைதி மக்கள் தொடர்பு அதிகாரி இந்தத் தகவலை தெரிவித்தார்.
சில்ஸ்பி லாரா லாவோன் என்ற அமெரிக்கப் பெண்ணின் தலைமையில் அமெரிக்கர்கள் 33 குழந்தைகளைக் கூட்டிச் சென்ற போது மால்பாசோ என்ற எல்லையோர நகரில் பிடிபட்டனர் என ஹைதி போலீசார் கூறினர்.
அவர்கள் பணம் கொடுத்து ஹைதி குழந்தைகளை வாங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதைத் தவிர ஹைதி அரசின் அனுமதி இல்லாமல் மைனர்களான குழந்தைகளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதுவும் சட்டமீறலாகும் என ஹைதி அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தப் புகார்களை லாரா லாவோன் மறுத்தார். இங்கு அனாதைக்குழந்தைகளுக்காக ஆதரவு இல்லம் அமைப்பது எங்கள் திட்டம். அதற்காக நிலம் கூட வாங்கிவிட்டோம். விரைவில் அங்கு கட்டடம் அமைக்கப்படும். அது வரை காபார்த்தி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குழந்தைகளை தங்கவைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த அநாதைக் குழந்தைகளின் பக்கம் அனைவரின் கவனத்தையும் திருப்பவே அவர்களை அழைத்துச் சென்றோம் என லாரா லாவோன் தெரிவித்தார்.
அமெரிக்கர்கள் அழைத்துச் சென்ற குழந்தைகள் எல்லாம் போர்ட் ஆப் பிரின்ஸ் நகருக்கு வெளியே உள்ள அரசு அனாதைகள் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹைதியிலிருந்து இளங்குழந்தைகளை சட்ட விரோதமாக கடத்திச் செல்ல நடக்கும் முயற்சிக்குஹைதி பிரதமர் ஜீன் மாக்ஸ் பெல்லாரிவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதி (யுனிச்செப்) அதிகாரிகளும் கண்டனம் செய்துள்ளனர். தரை வழி எல்லைகள், விமான நிலையங்களில் எங்கள் அதிகாரிகள் கூடுதல் விழிப்புடன் செயல்படுவார்கள் என யுனிச்செப் கூறியுள்ளது.

பேசும் படம்


இந்தியா & வங்கதேசம் எல்லையான அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் பகுதி வழியாக ஊடுருவுவதை தடுக்க முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ளவர்களுக்கு அசாம் எல்லைப்பகுதியில் உறவினர்கள் உள்ளனர். வேலி அமைக்கப்பட்டதால் அவர்களை பார்க்க வங்கதேசத்தினர் முன்புபோல் வரமுடியவில்லை. இதனால் வங்கதேச பகுதியில் இருந்து இந்திய பகுதியை கிராம மக்கள் பார்க்கின்றனர்
.