மக்கள் உரிமை படியுங்கள்

Saturday, July 24, 2010

போலி என்கெளண்டர்: சிபிஐயால் தேடப்படும் குற்றவாளி குஜராத் அமைச்சர் அமித் ஷா ராஜினாமா


அகமதாபாத்: சோராபுதீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீ ஆகியோரை போலி என்கெளண்ட்டரில் கொலை செய்ததாக சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட குஜராத் உள்துறை இணையமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தக் கொலைகளுக்கு சாட்சியான பிரஜாபதியையும் அமித் ஷா போலீசாரை வைத்து போலி என்கெளண்டர் நடத்தி கொலை செய்ததாகவும் வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அனுப்பிய சம்மன்களையடுத்து அமித் ஷா தலைமறைவானார். இதையடுத்து அவரைக் கைது செய்ய சிபிஐ தனிப் படைகளை அமைத்தது. அவரது அரசு அலுவலகத்திலும் சிபிஐ ரெய்ட் நடத்தியது.இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் நரேந்திர மோடியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார்.

நரேந்திர மோடியின் வலது கரமான இவர் மீது ஆள் கடத்தல்,கொலைகள்,கொலைச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளதால் எந்த நேரமும் கைதாகலாம் என்று தெரிகிறது.அவருக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மலிவு விலை லேப்டாப் ரூ.1500 மட்டுமே


மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் வெறும் ரூ.1500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அடுத்தாண்டு முதல் இது விற்பனைக்கு வரும்.புதுடெல்லியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த லேப்டாப்பை வடிவமைத்துள்ளது. இத்துறையின் அமைச்சர் கபில் சிபல் இதை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

இதுபோன்ற மலிவு விலை லேப்டாப்பை வடிவமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தபோது, தனியார் நிறுவனங்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இப்போது அத்தனை பெரிய நிறுவனங்களும் மலிவு விலை லேப்டாப் தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன. பெரிய தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இவற்றை தயாரிக்கும்போது, விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த லேப்டாப்பில் டச் ஸ்கிரீன், கீ போர்டு, 2 ஜி.பி.ராம் மெமரி,வை&பி இணைப்பு வசதி, யூஎஸ்பி போர்ட் ஆகியவை இருக்கும். அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு இவை விநியோகம் செய்யப்படும் என கபில் சிபல் தெரிவித்தார்.ஆரம்பத்தில் ரூ.500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது ரூ.1500 ஆகிவிட்டது.விரைவில் விலை ரூ.1000 ஆகக் குறைந்து,ரூ.500க்கு விற்பனை செய்ய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.