மக்கள் உரிமை படியுங்கள்

Monday, April 5, 2010

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றப்பத்திரிக்கை திருட்டு போனது!

மாலேகான் மற்றும் மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்குகளின் குற்றப்பத்திரிக்கைகளை அரசு வழக்கறிஞர் ராஜா தாக்கரே அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் மும்பை காவல்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.

மகாராஷ்டிராவிலுள்ள மாலேகானில் கடந்த 2006 ஆம் ஆண்டு குண்டுவெடித்ததில் 16 பேரும் 2008 ல் மும்பை புறநகர் ரயில்களில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 100 பேரும் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த இரு வழக்குகளின் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது.

இந்த இரு குற்றப்பத்திரிக்கைகளும் அரசு வழக்கறிஞர் ராஜா தாக்கரேயின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை இரண்டு நாட்களுக்கு முன்னர் அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக ராஜா தாக்கரே தெரிவித்துள்ளார். இவற்றின் நகல்கள் காவல்துறையிடமும் நீதிமன்றத்திலும் இருப்பதால் வழக்கு விசாரணையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஆனால், இவ்வழக்கு விசாரணையில் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளவர்களுக்குப்
பிரச்சனை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. சாதாரணமாக,குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நகலில் அவர்களுக்கு எதிரான அரசு தரப்பு சாட்சிகளைக் குறித்த விவரம் சாட்சிகளின் பாதுகாப்பு கருதி கொடுக்கப்படுவதில்லை. அரசு தரப்பு சாட்சிகள் யார் என்பதை அறிவதற்காக இவை திருடப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அவ்வாறெனில்,அது இவ்வழக்கின் விசாரணையையும் பாதிக்கும் என காவல்துறையினர்
அஞ்சுகின்றனர். குற்றப்பத்திரிக்கைகளைத் துணிச்சலாக அரசு வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து திருடிச் சென்றவர்களைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.