மக்கள் உரிமை படியுங்கள்

Showing posts with label தமிழ் நாடு. Show all posts
Showing posts with label தமிழ் நாடு. Show all posts

Saturday, December 11, 2010

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:

தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.

போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.

சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.

உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?

தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

Thursday, September 23, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்...! தமுமுக தலைமை வேண்டுகோள்


பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு செப்டம்பர் 24 அன்று வெளிவரும் நிலையில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க எல்லா மொழி நாளிதழ்களிலும் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித், ராமர் கோயிலை இடித்து கட்டப் பட்டதா? இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் தீர்ப்பு வெளிவரவிருக்கிறது.இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள் தனி என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஜமாத்துகள், சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள், வட்டார மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு தமுமுக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

“பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், இஸ்லாமிய சிந்தனை களோடும் சந்திக்கட்டுமாக.! 1992 டிசம்பர் 6&ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், 1995 முதல் தமுமுக தொடர்ந்து டிசம்பர் 6-ல் போராட்டங்களை நடத்தி வருவதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதும் நீங்கள் அறிந்த செய்திகளாகும்.

1948 முதல் நடந்துவரும் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்.24, 2010 அன்று தீர்ப்பு வெளிவர இருக்கிறது.தீர்ப்பு நியாயமான முறையில் நமக்கு கிடைக்க அன்றாடத் தொழுகைகளிலும், ஜும்ஆ தொழுகைகளிலும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட்டமாகக் கருதாமலும், பாதகமாக வந்தால் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும் என்பதை அனைத்து பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒருவேளை தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், இதே அறிவுரையை அப்போதும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.பொது அமைதி, சட்டம்&-ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதற்காக இறைவனிடம் பிரார்த்திப்போமாக.தமுமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும், முஸ்லிம்களின் சொத்துக்கள் இருக்கும் பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு காவல்துறையிடம் கோரிக் கை வைத்துள்ளோம்.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி தீர்ப்பு: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: அயோத்தி தீர்ப்பு எப்படி இருந்தாலும் இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதர உணர்வுடன், ஒற்றுமையைப் பேணிக் காக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணையில் இருந்தது. அது தொடர்பான தீர்ப்பு வெளியாகவுள்ளது.அதனைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் ஆர்வமும் அச்சமும் கலந்த பெரும் பரபரப்பு பொதுமக்களைப் பற்றியிருக்கிறது. யாருக்கு எதிராக இத்தீர்ப்பு வழங்கப்பட்டாலும் நாடு தழுவிய அளவில் பெரும் வன்முறை வெடிக்கும் என்கிற அச்சம் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் வெகுவாக மேலோங்கி உள்ளது.

இந்நிலையில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் எதிர்வரும் அக்டோபர் 3ம் தேதியிலிருந்து அக்டோபர் இறுதிவரை நடைபெறவுள்ளன. இதனால் சர்வதேச அளவிலும் அயோத்தித் தீர்ப்பு தொடர்பான அச்சம் பரவியுள்ளது.
ஒரு சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஜும்மா மசூதி அருகே வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாப் பேருந்தில் வந்திருந்தபோது அப்பேருந்தின் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, ஒரு சிலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு டெல்லியைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறான சூழலில் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவரவிருப்பது வன்முறைக்கு வித்திடும் என்கிற பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு வன்முறை நிகழ்வுகளில் இஸ்லாமியர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைக் காலம் கடந்த நிலையில்தான் அறிய முடிந்தது. அதாவது இஸ்லாமியர்களின் பெயரால் இஸ்லாமிய விரோதச் சக்திகள் இந்திய எல்லைக்குள் வன்முறையைத் தூண்டி விடுகின்றனர் என்பதைக் காலம் உணர்த்தியிருக்கிறது.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் இஸ்லாமியருக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் என்பதைப் போலவும் அதனால் இஸ்லாமியர்கள் பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதைப் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
எனவே வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் பொது அமைதியைக் கட்டிக்காப்பதற்கு வேறு எவரைக் காட்டிலும் இஸ்லாமியர்கள் கூடுதல் கவனத்துடன் கடமையாற்ற வேண்டும் என்பது இன்றியமையாததாகும்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றுகூடி, தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். அத்துடன், தமிழக அரசும் பொது அமைதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்டு வருகிற முயற்சிகளும் வரவேற்கத்தக்கதேயாகும்.
மேலும் இந்தத் தீர்ப்பு வெளியாகும் நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமெனவும், குறைந்தது மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இந்துக்களும் இஸ்லாமியர்களும் வெவ்வேறு பண்பாட்டு நடைமுறைகளைக் கொண்டிருந்தாலும், தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்களே என்பதை மறவாமல் எத்தகையத் தூண்டுதலுக்கும் இலக்காகாமல் சகோதர உணர்வுகளுடன் ஒற்றுமையைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சகோதர வாஞ்சையுடன் கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை நம்ப முடியாது-காங்:

இதற்கிடையே, தீர்ப்புக்குப் பின்னர் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங் பரிவார் அமைப்புகளும் வன்முறையில் ஈடுபடலாம். அவர்களை நம்ப முடியாது. இப்படித்தான் 1992ம் ஆண்டு அவர்கள் அளித்த வாக்குறுதியை நாடு நம்பியது. ஆனால் அப்போது நடந்த தவறுக்கு இன்று வரை நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. எனவே இவர்கள் விஷயத்தில் அரசு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் எச்சரித்துள்ளார்.

Saturday, July 10, 2010

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய, மற்றும் பாரசீக மதங்களை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வேண்டுவோர் பிளஸ் 1, பிளஸ் 2, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், டிப்ளமோ இன் நர்சிங், ஆசிரியர் பயிற்சி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு படிப்பவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களையும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

18 வயது பூர்த்தி அடையாத மாணவ, மாணவிகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயருடன் கூட்டுக் கணக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.இத்தகவல் சிறுபான்மை நல ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, July 7, 2010

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் வலியுறுத்தல்.


தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில்,முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நடந்தது.மாநாட்டின் முதல் நிகழ்வாக, முஸ்லிம்கள் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி, சென்னை புதிய தலைமைச் செயலகம் அருகே துவங்கி, தீவுத்திடலில் முடிந்தது.

தீவுத்திடலில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது: நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளதை குஷ்வந்த்சிங் போன்ற சிந்தனையாளர்கள் வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அதை முஸ்லிம் மதகுருமார்கள் புறக்கணித்தனர்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆங்கிலேயர் வழங்கிய வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் மறுத்தனர். தாங்கள் வகித்து வந்த உயர் பதவிகள் மற்றும் ஆங்கிலேயர் கொடுத்த சர் ராவ்பகதூர் போன்ற பட்டங்களையும் புறக்கணித்தனர்.

கடந்த 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது.கடந்த ஆண்டு, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, நாட்டில் உள்ள 13 சதவீத முஸ்லிம்களுக்கு, கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இப்பரிந்துரையை உடனடியாக சட்டமாக்க வேண்டும்.இதுதொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ஜெய்னூல் அபிதீன் பேசினார்.

Monday, June 28, 2010

செம்மொழி மாநாட்டில் கலாமும் பங்கேற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்-தமுமுக


உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கருத்துரை இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளரும், தமுமுக மாநில தலைவருமான ஜவாஹிருல்லா இதுகுறித்துக் கூறுகையில்,

கம்யூட்டரில் தமிழை பயன்படுத்துவதற்கு உரிய மென்பொருளை (தமிழ் யூனிகோடு) உருவாக்கி அனைவருக்கும் இலவசமாக வழங்கியவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினத்தை சேர்ந்த உமர்தம்பி. மறைந்துவிட்ட அவர் நினைவாக செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கம் அமைக்க வேண்டும் என முதல்வரிடம் மனு கொடுத்தோம். அதன்படி மாநாட்டில் உமர்தம்பி ஆய்வரங்கம் அமைக்கப்பட்டது. இதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உமர்தம்பியின் பணிகளை பாராட்டி அவர்கள் குடும்பத்திற்கு சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் விருது வழங்கினார்.

கணிணி தமிழ் ஆய்வுப்பிரிவு துவக்க வேண்டும் என பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் வலியுறுத்தினார். அப்பிரிவுக்கு உமர்தம்பியின் பெயர் சூட்ட வேண்டும். வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், திருக்குறளை உதாரணம் காட்டி பேசுபவர் முன்னாள் ஜானதிபதி அப்துல் கலாம். நம் நாடு அறிவியல் துறையில் வளர்ச்சி பெற பாடுபட்டவர் அவர். அவரை மாநாட்டிற்கு அழைத்திருக்க வேண்டும். அவரது கருத்துரை செம்மொழி மாநாட்டில் இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.

நன்றி : thatstamil.com

Saturday, May 22, 2010

குணங்குடி ஹனீபா உள்பட 8 பேர் விடுதலை


3 ரயில்களில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட
குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை
செய்தது. 13 ஆண்டுகளாக சிறையில் வாடிய குணங்குடி ஹனீபா உள்ளிட்ட சகோதரர்கள் இன்று விடுதலை. அல்ஹம்து லில்லாஹ்.குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு. 1997ம் ஆண்டு சேரன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 17 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குணங்குடி ஹனீபா உள்ளிட்டோர் கைது
செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து
வந்தது.இந் நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்து நீதிமன்றம்
உத்தரவிட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆனால் இழந்த அந்த 13 வருட வாழ்க்கை திரும்ப வருமா ??

Tuesday, May 18, 2010

உண்மையிலேயே சாதனைப் படைத்த மாணவி ஃபாத்திமா பானு

காது கேளாத, பேசுவும் வராத பிளையை பெற்றால், நாம் மிகுந்த கவலைக்கு
உள்ளாகுவோம். ஆனால் தனது விடா முயற்சியால் எல்லா திறனும் பெற்று உள்ள மாணவிகளை விஞ்சும் அளவிற்கு வாய் பேச இயலாத, காது கேட்காத ஃபாத்திமா பானு சாதனைப்படைத்து இருக்கிறார்.

காசு, பணம் உள்ள பணக்கார தந்தைக்கு பிறந்தவரா என்றால் அதுவும் இல்லை. ஒரு கார் டிரைவரின் மகளாக பிறந்த அவர், அவர் தந்தையின் விடா முயற்சியால் இந்த வெற்றிக் கனியினை பறித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்த கார் டிரைவரான பி.எம். முஹம்மது அப்துல்லாஹ் நாகூர் மீரா தம்பதிகளுக்கு மகளாக ஃபாத்திமா பானு பிறந்தார். பிறந்த சில மாதங்களிலே ஃபாத்திமா பானுக்கு பேச்சுத்திறன், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் பெற்றோர்கள் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள். மகளின் எதிர்காலம் அவர்களின் கண் முன் வந்து நின்றது. முஹம்மது அப்துல்லாஹ் தன்னுடைய குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு, மகளின் குறைபாடு தெரியாமல் அவரை படிக்க முடிவு செய்தார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் அவரை சேர்த்தனர்.வாய் பேச முடியாவிட்டாலும், காது கேட்கும் திறனை இழந்து விட்டாலும் மாணவி ஃபாத்திமா பானு தனக்கு எதிரே பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் ஆற்றலை பெற்று இருக்கிறார். இந்த ஆற்றலே அவர் பிளஸ்2வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு துணை புரிந்தது. பிளஸ் 2வில் வணிக கணிதம் (பிசினஸ் மேக்ஸ்) பாட பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுதிய அவர் 14.05.2010 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 1000க்கு 953 மதிப்பெண் பெற்று பள்ளியிலே முதல் மாணவியாக தேர்வு பெற்றார். தமிழில் 177 மார்க்கும், பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குபதிவியலில் 189,வாணிக கணிதத்தில் 193 மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறார். இந்த வெற்றி அவரையும் அவரின் பெற்றோர்களையும் மன மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பிளஸ்2க்கு பிறகு பி.காம் படித்து, சி.ஏ.(ஆடிட்டர்) ஆக வேண்டும் என்பது தான் அவருடைய இலட்சியமாக இருக்கிறது. முதலிடம் பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தி, கட்டி பிடித்து உன் விடாமுயற்சிக்கு பாராட்டுகள் என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.

பிளஸ்2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி ஃபாத்திமா பானு இன்னும் ஓராண்டு ஆங்கில கல்வியை அதே பள்ளியில் கற்க வேண்டியுள்ளது. இதன்பிறகு அடுத்த ஆண்டு (2011) அவர் கல்லூரிக்கு சென்று தன்னுடைய இலட்சிய பயணத்தை தொடருவார். ஃபாத்திமா எனக்கு மூத்த மகள். பிறந்து சில மாதங்களிலே அவளால் பேசவும், கேட்கவும் முடியாது என்பது எங்களுக்கு தெரியவந்தது. இது எங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. மனதில் தோன்றிய காயங்களை தாங்கிக்கொண்டு, என் மகளின் எதிர்காலத்திற்காக பாடுபட்டு வருகிறோம். ஆண்டவனின் கருணையால் பிளஸ்2 தேர்வில் அவள் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறார். ஆடிட்டராக வர வேண்டும் என்பது அவளின் விருப்பம். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் என நம்புவதாக அவரது தந்தை தெரிவித்தார்.

Saturday, May 15, 2010

மேல்படிப்பு தொடர பண உதவி வேண்டும் :மாநில ரேங்க் மாணவி வேண்டுகோள்


தூத்துக்குடி : பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த காயல்பட்டணம் பள்ளி ஏழை மாணவி பாத்திமுத்து, தனது மேல்படிப்பு தொடர யாராவது பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்செந்தூர்அடுத்த காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமுத்து. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் 200க்கு 172 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை அபுமுகமது, சென்னையில் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பால் அமீனா, ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பாடவாரியாக

இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் -123, ஆங்கிலம் -92, மனை இயல் -125, உளவியல் -172, எழுத்து மற்றும் செய்முறை தேர்வு - 366. மொத்தம் - 878/1200.

பாத்தி முத்து கூறுகையில்,' எனது இந்த சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் காரணம். நர்சிங் அல்லது ஆசிரியர் பயிற்சி படிக்க விரும்புகிறேன். அதற்கு போதுமான பண வசதியில்லை. யாராவது பண உதவி செய்தால் மேல்படிப்பை தொடர தயாராகவுள்ளேன்'' என்றார்.

உதவி செய்ய நீங்கள் தயாரா ? : இந்த ஏழை மாணவிக்கு நமது வாசகர்கள் பலர் உதவி செய்ய தயாராக இருப்பதாக மெயில் மூலமும் , வாசகர் பகுதி மூலமும் தெரிவித்திருந்தனர். அவர்கள் ஈகை எண்ணத்தை ஈடேற்றிட மாணவி பாத்திமுத்துவின் முகவரியும், மொபைல் எண்ணும் தரப்பபட்டுள்ளது. உதவி செய்ய விரும்புவோர் இவர்களிடம் தொடர்பு கொள்ளலாம்.

முகவரி: பாத்திமுத்து, பா/ கா . நாகூர் முத்து , 49 பள்ளிமார்தெரு, காயல்பட்டணம், தூத்துக்குடி மாவட்டம் , மொபைல் எண்: 9698386885 .

Thursday, May 13, 2010

கணினி தமிழ் முன்னோடி உமர் தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் தமுமுக கோரிக்கை


ஓலைச் சுவடிகளில் உறைந்து கிடந்த தமிழ், பின் படிப்படியாக புத்தகங்களாக, பின்னர் கணினி மூலம் உலகெங்கும் வியாபித்திருக்கிறது. அதற்காக உழைத்த உமர் தம்பிக்காக இக்கோரிக்கை இக்கடிதம்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராமப்பட்டிணத்தில் ஜீன் 15, 1953ல் அப்துல் ஹமீது, ரொக்கையாவுக்கு மகனாய் பிறந்தவர் உமர் தம்பி.

முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார். 2001 ஆம் ஆண்டு துபாயில் இருந்து பணியில் விருப்ப ஓய்வு பெற்று தாயகம் வந்தார். தமிழகம் வந்து மென்பொருட்கள் தயாரித்துக் கொடுக்கும் பணியை செய்தார். பின்னர் தமிழ் கூறும் நல்லுலகம் கணினியிலும் தடம் பதிக்க ஆரம்பித்த அக்காலத்தில் தன்னையும் அதனுடன் இணைத்துக் கொண்டார்.

தேனீ இயங்கு எழுத்துரு :

உலாவிகளில் ((Browser) செயல்படும் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பமான (WEFT) வெஃப்ட்-ஐ முதன் முதலாகத் தமிழில் அறிமுகம் செய்தார். அதைக் கொண்டு, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத போதும் கூடத் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களால் அமைந்த இணையத்தளங்களை மைக்ரோசாஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை ஏற்படுத்த முடிந்தது.தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றி பல்வேறு இணையத் தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் அனேகம் பேர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.

உதாரணத்திற்கு www.murasoli.in முரசொலி இணையதளத்தை கணிணியில் வாசிப்பதென்றால் முரசொலி இணையதளத்தில் நிறுவப்பட்டிருக்கும் (Tamil Font) தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்த பின்னரே வாசிக்க முடியும். ஆனால் உமருடைய தேனி தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி எந்த இணையதளமாக இருந்தாலும் தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்தாமல் வாசிக்கலாம்.

தமிழ் இணைய அகராதி

கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து தமிழ் இணைய அகராதியைக் கொண்டு வந்தார் உமர் தம்பி.

உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் :
1. AWC Phonetic Unicode Writer
2. Online RSS creator – can be used in offline as well
3. RSS செய்தியோடை உருவாக்கி
4. எண்களாக தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி
5. தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி
6. எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி
7. ஒருங்குறி மாற்றி
8. க்னூ (Linex) பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள்
9. தேனீ ஒருங்குறி எழுத்துரு
10. வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு
11. வைகை இயங்கு எழுத்துரு
12. தமிழ் மின்னஞ்சல்
13. தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி
14. Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்)
15. தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.

உமருக்கு ஏன் அங்கீகாரம்

சொற்ப பலன்களைக் கொண்ட மென்பொருள் நிரலிகளை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் யுனிகோட் எழுத்துருக்களும், பல மென்பொருள் நிரலிகளையும் உருவாக்கி எவ்வித பொருளாதார எதிர்ப்பார்ப்புமின்றி பொதுப் பயன்பாட்டுக்கு வைத்தவர் உமர் தம்பி. இளம் வயதிலிருந்து தம் தாய்மொழி தமிழ் மீது நல்ல பற்றுள்ளவராக இருந்து வந்துள்ளார் உமர். உமர் மறைந்தது, 2006 ஆம் ஆண்டு ஜூலை 12. மண்ணில் மறைந்தாலும் தமிழ்க் கணினி உலகம் இருக்கும் வரை பெருங்கொடையினை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார், உமர்.

இணையத்தில் விரைவாக தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று பல வகையான தமிழ் வலைப்பூ பதிவுகளுக்கும், தமிழ் கணினி தொழில் நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இணையப் பயன்பாட்டாளர்களாலும் தமிழ் இணைய அறிஞர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.
கணினியில் தமிழ் மொழி அதிவிரைவில் வளர்ச்சியடைவதற்கு உமர் தம்பி போன்றவர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது.அதுபோல் உமரின் எழுத்துருக்கள், செயலிகள், கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள், அறிவுரைகள் அன்றும் இன்றும் தமிழ் இணையப் பயனார்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

உமருக்கு உரிய அங்கீகாரம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கிடைக்கப் பெற்றால் முதலில் மகிழ்ச்சி அடையப் போவது இணையத் தமிழ் மக்கள் தான்.உமருக்கு அங்கீகாரம் கிடைக்கப்பட்டால், அது கணினித் தமிழில் சாதனைப் படைக்க எந்த அரசாங்கத்தின் உதவியின்றி தமிழுக்காக தன்னலமற்ற சேவைகள் செய்துவரும், செய்ய துடிக்கும் எத்தனையோ உமர் தம்பிகளை இவ்வுலகம் காணும். தமிழ் இணையத்தில் தனக்கேன்று தனித்துவத்துடன் திகழும், மென்மேலும் வளர்ச்சியடையும்.

நம் தாய்மொழி தமிழ்ச் செம்மொழியாக மட்டும் இல்லாமல், அதற்கு மேலும் இவ்வுலகில் பல அங்கீகாரங்களை பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.அரசு உதவியின்றி தம் தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்ட உமர் தம்பி போன்ற எண்ணற்ற தன்னார்வத் தமிழ் கணினி தொண்டர்களை கண்டறியப்பட வேண்டும், அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

உமர் தம்பி பெயரில் விருதோ அல்லது உமர் தம்பி பெயரில் தமிழில் கணினி ஆய்வு செய்வோருக்கு கல்வி உதவித் தொகையோ அல்லது கணினித் தமிழ் ஆராய்ச்சி குழுவுக்கு பெயரோ அல்லது தமிழ்க் கணினி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு துறைக்கு உமரின் பெயரையோ சூட்டினால், அது அவருக்கு செய்யும் கௌரவமாக இருக்கும்.கோவையில் ஜீன் 23 முதல் தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடைபெறவுள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க செய்ய முத்தமிழறிர் ஆகிய நீங்கள் ஆணை பிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இணையக்கடலில் தமிழை மிகச் சுலபமாக பயணம் செய்ய உதவியவர்களில் முன்னணியில் இருந்த உமர் தம்பிக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகாரம் தர வேண்டும் என்பதே இன்று இணையத் தமிழர்களின் விலை மதிக்க முடியாத விருப்பமாக உள்ளது.அப்படி ஓர் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால், பெருமையடையப் போவது உமர் தம்பியல்ல... இணையத் தமிழே! இச்சாதனைக்கு வழிவகுத்திடுமாறு மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேற்கண்டவாறு தமுமுக தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி : த.மு.மு.க இனைய தளம்

Sunday, March 14, 2010

பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்


தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று (மார்ச் 12) அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

அல்லாஹு அக்பர்.

Wednesday, January 27, 2010

தமிழகத்தில் மரபணு கத்தரிக்காய்க்கு தற்காலிக தடை


"மரபணு மாற்றுக் கத்தரிக்காய் குறித்து அரசு முடிவெடுக்கும் வரை, அதை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கப்படாது' என, முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு செய்திக் குறிப்பு: முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில், பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு, பெண்கள் இணைப்புக் குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் சந்தித்து, மரபணு மாற்றுக் கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டனர். முதல்வர் கருணாநிதி, அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றுதெரிவித்தார்.மேலும், எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரை, இதை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.