மக்கள் உரிமை படியுங்கள்

Monday, February 8, 2010

நடுவானில் விமானங்கள் மோதல் அமெரிக்காவில் மூன்று பேர் பலி


நியூயார்க்:அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாயினர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் பவுல்டர் விமான நிலையத்திலிருந்து ஒரு இருக்கை கொண்ட விமானம், மூன்று பயணிகளை கொண்ட கிளைடர் விமானத்தை இழுத்து கொண்டு நேற்று முன்தினம் பறந்தது.

பவுல்டர் நகரத்தின் வடக்கு பகுதியில் இந்த விமானங்கள் சென்று கொண்டிருந்த போது, நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் திடீரென வந்து ஒரு இருக்கை கொண்ட விமானத்தின் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஒரு இருக்கை மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட விமானங்கள் வெடித்து சிதறின.இந்த விபத்தில் மூன்று பேர் பலியாயினர். கிளைடர் விமானத்தில் இருந்த பைலட்டும், ஒரு பெண் பயணியும் அவரது குழந்தையும் பாரசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கி விட்டனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு முன்னதாகவே சதாம் உசேனை அகற்ற பிரிட்டன் ரகசிய திட்டம்: புதிய தகவலால் பரபரப்பு


லண்டன்:அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே, அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்கு, பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.

இதில், அந்த கட்டடம் தரை மட்டமாகியது. இதைத் தொடர்ந்து, ஈராக் மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் தாக்குதல் நடத்தின. தலைமறைவான அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை, அமெரிக்க ராணுவம் கைது செய்தது. இதையடுத்து, அவர் மீது ஈராக் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, தூக்கில் போடப்பட்டார்.

ஆனால், அமெரிக்க உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு முன்னதாகவே, ஈராக் அதிபர் பதவியில் இருந்து சதாம் உசேனை அகற்றுவதற்கு பிரிட்டன் அரசு ரகசிய திட்டமிட்டதும், இது தொடர்பாக ஈராக்கில் உள்ள சதாம் எதிர்ப்பாளர்களுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் நகல் ஒன்று தற்போது கைப்பற்றப்பட்டு, வெளி உலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேருக்கும், சதாம் உசேன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இந்த உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஈராக் நாட்டுக்கும், மக்களுக்கும் பிரிட்டன் எப்போதும் ஆதரவாக இருக்கும். ஈராக் மக்களுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது. ஈராக் மக்களின் உரிமைகளை காக்கவும், அங்கு நிரந்தர அமைதி ஏற்படவும், அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்துவதற்கும் பிரிட்டன் உதவும். அடக்கு முறையில் இருந்தும், அநியாயமாக கைது செய்யப்படுவதில் இருந்தும் ஈராக் மக்களை காப்போம். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி, சதாம் உசேன் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால், ஈராக்குடன் எண்ணெய் கிணறு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்படும்.

ஈராக் சார்பில் வாங்கப்பட்ட கடன் ரத்து செய்யப்படும். வர்த்தக உடன்படிக்கைகளும் மேற்கொள்ளப்படும். உலக வங்கி, சர்வதேச நிதியகம், ஐரோப்பியயூனியன் ஆகியவற்றிடம் இருந்து நிதி உதவி பெற்றுத் தரப்படும்.இவ்வாறு அந்த ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டோனி பிளேர் தற்போது கூறுகையில், "அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின்னரே, சதாம் உசேனை ஆட்சியில் இருந்து அகற்றும் விஷயத்தில் கவனம் செலுத்தப்பட்டது' என்றார்.இந்த விவகாரம் பிரிட்டனில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.