காது கேளாத, பேசுவும் வராத பிளையை பெற்றால், நாம் மிகுந்த கவலைக்கு
உள்ளாகுவோம். ஆனால் தனது விடா முயற்சியால் எல்லா திறனும் பெற்று உள்ள மாணவிகளை விஞ்சும் அளவிற்கு வாய் பேச இயலாத, காது கேட்காத ஃபாத்திமா பானு சாதனைப்படைத்து இருக்கிறார்.
காசு, பணம் உள்ள பணக்கார தந்தைக்கு பிறந்தவரா என்றால் அதுவும் இல்லை. ஒரு கார் டிரைவரின் மகளாக பிறந்த அவர், அவர் தந்தையின் விடா முயற்சியால் இந்த வெற்றிக் கனியினை பறித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்த கார் டிரைவரான பி.எம். முஹம்மது அப்துல்லாஹ் நாகூர் மீரா தம்பதிகளுக்கு மகளாக ஃபாத்திமா பானு பிறந்தார். பிறந்த சில மாதங்களிலே ஃபாத்திமா பானுக்கு பேச்சுத்திறன், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் பெற்றோர்கள் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள். மகளின் எதிர்காலம் அவர்களின் கண் முன் வந்து நின்றது. முஹம்மது அப்துல்லாஹ் தன்னுடைய குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு, மகளின் குறைபாடு தெரியாமல் அவரை படிக்க முடிவு செய்தார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் அவரை சேர்த்தனர்.வாய் பேச முடியாவிட்டாலும், காது கேட்கும் திறனை இழந்து விட்டாலும் மாணவி ஃபாத்திமா பானு தனக்கு எதிரே பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் ஆற்றலை பெற்று இருக்கிறார். இந்த ஆற்றலே அவர் பிளஸ்2வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு துணை புரிந்தது. பிளஸ் 2வில் வணிக கணிதம் (பிசினஸ் மேக்ஸ்) பாட பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுதிய அவர் 14.05.2010 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 1000க்கு 953 மதிப்பெண் பெற்று பள்ளியிலே முதல் மாணவியாக தேர்வு பெற்றார். தமிழில் 177 மார்க்கும், பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குபதிவியலில் 189,வாணிக கணிதத்தில் 193 மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறார். இந்த வெற்றி அவரையும் அவரின் பெற்றோர்களையும் மன மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பிளஸ்2க்கு பிறகு பி.காம் படித்து, சி.ஏ.(ஆடிட்டர்) ஆக வேண்டும் என்பது தான் அவருடைய இலட்சியமாக இருக்கிறது. முதலிடம் பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தி, கட்டி பிடித்து உன் விடாமுயற்சிக்கு பாராட்டுகள் என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.
பிளஸ்2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி ஃபாத்திமா பானு இன்னும் ஓராண்டு ஆங்கில கல்வியை அதே பள்ளியில் கற்க வேண்டியுள்ளது. இதன்பிறகு அடுத்த ஆண்டு (2011) அவர் கல்லூரிக்கு சென்று தன்னுடைய இலட்சிய பயணத்தை தொடருவார். ஃபாத்திமா எனக்கு மூத்த மகள். பிறந்து சில மாதங்களிலே அவளால் பேசவும், கேட்கவும் முடியாது என்பது எங்களுக்கு தெரியவந்தது. இது எங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. மனதில் தோன்றிய காயங்களை தாங்கிக்கொண்டு, என் மகளின் எதிர்காலத்திற்காக பாடுபட்டு வருகிறோம். ஆண்டவனின் கருணையால் பிளஸ்2 தேர்வில் அவள் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறார். ஆடிட்டராக வர வேண்டும் என்பது அவளின் விருப்பம். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் என நம்புவதாக அவரது தந்தை தெரிவித்தார்.