மக்கள் உரிமை படியுங்கள்

Monday, July 19, 2010

இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்


நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை. சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை. ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று. சதா சர்வ நேரமும் தன்னை கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்?

இந்த அரசும், ஊடகங்களும் ‘முஸ்லிம் என்றாலே உடம்புக்குள் நான்கைந்து குண்டுகளை கட்டிக்கொண்டுதான் அலைகிறான்’ என்பதான பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. அவையே பொதுப்புத்தியை உற்பத்தி செய்கின்றன. அதனால்தான் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிக சிக்கலானதாக இருக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் மிக வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு வீடு மறுக்கப்படுகிறது.

நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது, அதில் ஒரு முஸ்லிம் இருந்தால் ’நீ எல்லாம் உங்க ஆளுகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவ’ என்று மற்றவர்கள் கமெண்ட் அடிப்பதும், அது இயல்பான ஒன்றாக இருப்பதும் எத்தகையது?

அப்பாவி முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்த இந்து தீவிரவாதிகள் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படுவது இல்லை; முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதும் இல்லை. அப்படியே வழக்கு நடத்தி, தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படுவது இல்லை. ஆனால் முஸ்லிம் கைதிகள் மீதான வழக்குகள் மட்டும் அதிவேகமாக நடத்தப்பட்டு அதிவேகமாக தண்டனை வாங்கித்தரப்படுகிறது. ப‌ல‌ர் விசார‌ணைகூட‌ இல்லாம‌ல் 5 ஆண்டுக‌ள், 10 ஆண்டுக‌ள் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

திண்ணியம் தொடங்கி கயர்லாஞ்சி வரை நாடெங்கும் இந்து அடிப்படைவாதத்தின் சாதி வெறிக்கு லட்சக்கணக்கான தலித் மக்கள் நாள்தோறும் பலியிடப்படுகின்றனர். இந்த சமூக அசிங்கங்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாத சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் முஸ்லிம்களின் சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி பூதாகரம் செய்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு 'தாலிபான் பிராண்ட் முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை' என்று தெனாவட்டாக எழுதியது இந்தியா டுடே. 'உன்னைப் போல் ஒருவன்' என்னும் கடந்த பத்தாண்டுகளின் மோசமான இஸ்லாம் காழ்ப்பு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதைப்பற்றிய எந்த குற்றவுணர்வுமின்றி உலக நாயகன் உலவுவதும் இந்தப் பின்னணியில்தான்.

இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் இதன் பெயர் மத சார்பற்ற நாடுதான். காவல் நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான். இந்த பெரும்பான்மைவாத பூதத்தின் அசிங்கமான பிடிக்கு இடையிலே முஸ்லிம்கள் அனுதினமும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. தங்கள் மீதான காழ்ப்பு மிகுந்த சொற்களை கண்டும் காணாமல் நகர்ந்துசெல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பான்மையை அனுசரித்துச் செல்லாத சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அடக்கி, ஒடுக்கப்படுகின்றனர். இதன் மறுவளமாக அப்துல் கலாம் பிராண்ட் முஸ்லிம்களை உற்பத்தி செய்து தனது ரத்தக்கறைகளை மறைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் இந்து பாசிஸ்ட்டுகள்.

மதம் என்பது மனிதனுக்கு அபீனைப் போன்றது என்றார் காரல் மார்க்ஸ். அது இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஆனால் யதார்த்தத்தை முன்வைத்தே நாம் பேச வேண்டியிருக்கிறது. தேச எல்லைகளைக் கடந்து உலக அளவில் ஒடுக்கப்படும் இனமாக இருப்பது இஸ்லாம்தான். அமெரிக்க வல்லாதிக்கம் தனக்கான முகமாக முதலாளித்துவத்தை சூடிக்கொண்ட கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகக் கட்டமைத்தது; இப்போதும் அது தொடர்கிறது. அதன் அடுத்த பதிப்பாக இப்போது உலக அளவில் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. இது வேறு எந்த மதத்துக்கும் நிகழாதது.

'கீற்று' இணையதளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி, இந்திய முஸ்லிம்களின் சமூக, அரசியல் வாழ்நிலை குறித்தான ஒரு அமர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள் தங்களது வேதனைகளை, வலிகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். நம்மிடையே உருவாக்கப்பட்ட, உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட முஸ்லிம் காழ்ப்பை நாம் கலைந்தாக வேண்டும். அச்சுமூட்டுவதாகவும், பதற்றம் தருவதாகவும் இருக்கும் தினவாழ்வில் இருந்து முஸ்லிம் மக்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்கான முற்போக்கு சக்திகளின் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக கீற்றின் ஆறாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி இந்த நிகழ்வை கீற்று இணையதளம் ஒருங்கிணைக்கிறது.

கீற்று இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா

நாள்: 24.07.2010, மாலை 5.00 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை.

அமர்வு - 1

இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்
(பாதிக்கப்பட்ட சகோதரர்களின் நேரடி வாக்குமூலங்கள்)

கருத்துரை:

வழக்கறிஞர் புகழேந்தி (ஒருங்கிணைப்புச் செயலர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்)

'தலித் முரசு' புனித பாண்டியன்

அமர்வு - 2

"குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால், அதுதானே மறைந்துவிடுமேயல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப்போல் வாழாது." - பெரியார், குடிஅரசு - தலையங்கம் - 01.05.1927

கீற்று.காம் - பயணமும், இலக்கும்

கருத்துரை:

சுப.வீரபாண்டியன்
விடுதலை இராசேந்திரன்
ஜெயபாஸ்கரன்
பாரதி கிருஷ்ணகுமார்
மாலதி மைத்ரி
பாஸ்கர் சக்தி
யுகபாரதி

அனைவரும் வருக

- கீற்று ஆசிரியர் குழு

தொடர்புக்கு: 99400 97994

---
நன்றி : கீற்று.காம்