Monday, March 8, 2010
ஹிந்து சாமியார் நித்யானந்தாவின் அனைத்து வழக்குகளும் ஒருங்கிணைக்கப்படுகிறது.
சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா சாமியார் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஹிந்து ஆன்மிக வாதி பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி மக்களுக்கு போதிக்கும் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
நடிகை ரஞ்சிதாவும் சாமியாரும் சகஜமாக பேசிக் கொண்டு உல்லாசமாக இருப்பதை பார்க்கும்போது இது இருவருக்கும் நீண்டகாலப் தொடர்பு என்று தெரிந்தது. இந்நிலையில் நித்யானந்தா திடீரென தலைமறைவானார். இதை தொடர்ந்து சாமியார் நித்யானந்தா மீது கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சாமியார் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும். ஆசிரமம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் முடக்க வேண்டும்‘ என்று கோவையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கோவை மாநகர போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் நித்யானந்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ(மத உணர்வுகளை புண்படுத்துதல்), 420(மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:
நித்யானந்தா மீதான வழக்கு தொடர்பாக நித்யானந்தா & ரஞ்சிதா ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோவை ஆதாரமாகச் சேர்க்கவும், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ரஞ்சிதா இருக்குமிடம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார். நித்யானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விசாரிக்க போவதாக போலீசார் தெரிவித்தனர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா முஸ்லிம், தலித்துக்கு எதிரான சதி
லக்னோ, மார்ச் 8: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம் முஸ்லிம்கள், தலித்துகளை நாடாளுமன்றத்துக்கு வரவிடாமல் தடுக்க சதி நடப்பதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் முலாயம் சிங் யாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு சமாஜ்வாடி கட்சி எதிரானது அல்ல. ஆனால், அந்த இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும். இப்போது உள்ள நிலையிலேயே மசோதாவை நாங்கள் ஆதரிக்க முடியாது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் முற்பட்ட வகுப்பினர் மட்டுமே பலனடைவர்.
மகளிர் மசோதா மூலம் முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோரை நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளுக்கு வரவிடாமல் தடுக்க சதி நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ. கட்சிகள் எப்போதுமே முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் எதிரானவை. எனவே, அரசியல் சட்டத்தை திருத்த விரும்புகின்றனர். குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து முஸ்லிம் எம்.பி. ஒருவர் கூட இல்லை. நிலைமை இப்படி இருக்கும்போது இடஒதுக்கீடு இல்லாமல் முஸ்லிம் பெண்கள் எப்படி நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட முடியும்?
மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆபத்தானது. இப்போது உள்ள நிலையிலேயே மசோதா நிறைவேறினால், முஸ்லிம், தலித்துகள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட முடியாது. அவர்களது தலைமை வளரக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது. பெண்களை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் உண்மையான நோக்கமாக இருந்தால் கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை.
காங்கிரஸ், பா.ஜ. கட்சி எம்.பி.க்களே மகளிர் மசோதாவுக்கு எதிராக உள்ளனர். ஆனால், கட்சித் தலைமையில் முடிவை எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் அடிமைகளாக உள்ளனர். மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிப்பதற்கு பதிலாக எல்லா கட்சிகளும் தேர்தலில் 20% பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.
இவ்வாறு முலாயம் சிங் யாதவ் கூறினார்.
லாலு எதிர்ப்பு: பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு அளித்த பேட்டியில், ‘‘பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை நசுக்கும் வகையில் மகளிர் மசோதா உள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதவை கடுமையாக எதிர்ப்போம். மகளிர் மசோதா ஒரு அரசியல் தவறு. மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரட்டை வேடம் போடுகிறார். ஏற்கனவே, மசோதாவை எதிர்த்த இவர் இப்போது, பா.ஜ.வை திருப்திப்படுத்துவதற்காக ஆதரிக்கிறார். இந்த ஆண்டு சட்டப் பேரவைக்கு தேர்தல் வருவதை மனதில் கொண்டு பா.ஜ.வை அனுசரித்து செல்கிறார்’’ என்றார்.
Subscribe to:
Posts (Atom)