மக்கள் உரிமை படியுங்கள்

Sunday, December 12, 2010

இவர்களை நினைத்து வேதனை படுவதா அல்லது சந்தோஷ படுவதா ??


ஆந்திராவை சேர்ந்த பெற்றோர் 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை சென்னையில் கண்டுபிடித்து ஒன்று சேர்ந்தனர்.ஆந்திரா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள கிராமம் ஹாலம்பள்ளி. இந்த கிராமத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்பவர் ஷேக் குரான்(56). இவரது மனைவி சுபைதா பேகம்(40).

இவர்களது மகன் ஷேக் சபீர் 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டான். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஷேக் சபீர்(19) சென்னையில் இருப்பதை தெரிந்து வியாழக்கிழமை சென்னை வந்தனர். 12 ஆண்டுக்கு பின்பு மகனை சந்தித்தும் பேச முடியவில்லை. காரணம் பெற்றோருக்கு உருது, தெலுங்கு மொழிகள் மட்டுமே தெரியும். சபீருக்கு தமிழ் மட்டுமே புரியும். பின்னர் மொழி தெரிந்தவர்கள் விளக்கம் சொன்னார்கள்.

பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி முத்தமிழன், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் முன்னிலையில் மகனை ஒப்படைந்தனர்.இதுகுறித்து சபீர் கூறுகையில், ‘‘சின்ன வயதில் ஓடிவந்தது நன்றாக நினைவு இருக்கிறது. நண்பர்களுடன் ரயில் ஏறியதுதான் நினைவுக்கு வந்தது. பின்னர் ஒரு ஊரில் இறங்கினோம். கொஞ்ச நாட்கள் அங்கு இருந்தோம். நான் மட்டும் இன்னொரு ரயில் ஏறி 2000ம் ஆண்டு இங்கு வந்தேன். மற்றவர்கள் வரவில்லை. ரயில்வே போலீஸ் என்னை பிடித்து சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைத்தனர். அங்கு 9வது வரை படித்தேன்.

பின்னர் 2008ம ஆண்டு வெளியில் வந்து விட்டேன். கோயம்பேட்டில் வேலை செயும் போது உதவி இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்து அழைத்து சென்றார். அங்கு தங்கியபடி ஐயப்பா என்டர்பிரைசசில் தோல் தொழில் பயிற்சி பெற்றேன். பின்னர் அங்கு வேலை செய்த மேற்பார்வையாளர் சுரேஷ், அவர்களது நண்பர்கள் பாமக பிரமுகர் ஆனந்த், அதிமுக பிரமுகர் வெங்கடேசன், அரிமா சங்கத்தினர் எனது பெற்றோரை கண்டுபிடித்தனர். என் பெற்றோர் கிடைக்க வேண்டும் என்று ஐயப்பனுக்கு மாலை போட்டேன். இன்று ஊருக்கு போகிறேன். 17ம் தேதி மொகரம் முடிந்ததும் சென்னை வருவேன். சபரிமலைக்கு 20ம்தேதி போகிறேன்’’ என்றார்.

சேஷக் குரான், சுபைதா பேகம் கூறுகையில், ‘‘எங்களுக்கு சபீர் 4வது பையன். அவனுக்கு 2 அண்ணன், ஒரு அக்கா, ஒரு தங்கை இருக்கிறார்கள். அல்லாவின் அருளாலும், நல்லவர்கள் உதவியாலும் எங்கள் பையன் கிடைத்து விட்டான். அவன் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளது குறித்து எங்களுக்கு வெறுப்போ, வருத்தமோ இல்லை. அது அவன் விருப்பம். இப்போது அவன் கிடைத்த மகிழ்ச்சியே போதும். சபீர் இங்கேயே வேலை செய்யப் போகிறானாம். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எங்களை பார்க்க வருவானாம். எல்லா பிள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து விட்டோம். ஆனால் இவன் 2 ஆண்டாவது எங்களுடன் முழுமையாக இருந்த பிறகுதான் கல்யாணம்’’ என்றனர்.

இவர்களை நினைத்து வேதனை படுவதா அல்லது சந்தோஷ படுவதா ??