மக்கள் உரிமை படியுங்கள்

Showing posts with label மார்க்கம். Show all posts
Showing posts with label மார்க்கம். Show all posts

Tuesday, September 21, 2010

கோபம் !!!

"இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134)"

பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பா விட்டாலும், பிற மனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிற மனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக உறவினராக, சகபணியாளனாக, மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக, இப்படி பல்வேறு வகையினராக இருக்கலாம். அவர்கள் அனைவருமே, நல்லவர்களாக இருந்திடுவதில்லை. அவர்களில் ஒருசிலர் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும்போது, அவமானப்படுத்தும் போது ஆத்திரம் வரும். பழிவாங்க வேண்டும் என்று நமது உள்ளம் ஆர்ப்பரிக்கும். அதுதான் இயற்கையும் கூட.

ஆனால்… உலகில் ஒவ்வொருவருமே இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அலைந்தால் அல்லது திருப்பித்தாக்க ஆரம்பித்துவிட்டால், உலகில் உடலாலும்-மனதாலும் ஊனமுற்றவர்களே நிறைந்து காணப்படுவார்கள். உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் என்ன வென்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், சகிப்புத் தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம். எனவே தான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் சகிப் புத் தன்மையை இறை நம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று கூறவில்லை மாறாக கோபத்தை மென்று விழுங்கி விடுமாறு வலியுறுத்துகிறது.

கோபப்படும் மனிதர்கள் ஒவ்வொரு வரும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் நடைமுறை வாழ்வில் உப்புக்கல்லுக்கும் பெறாத, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் கோபப்பட்டு நம் உடலையும் மனதையும் வருத்திக் கொள்கிறோம். ஒரு வகையில் பார்த்தால் கோபம் என்பது கூட தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம்தான். கோபத்தின் உச்சகட்ட நிலையை அடைந்த ஒருவன், அதன் தொடர்ச்சியாக பல்வேறு வகையான முட்டாள்த் தனமான செயல்களில் ஈடுபடுவான். (உ.ம்) தட்டியவுடன் கதவு திறக்கவில்லை என்றால்… உடனே நாம் கதவையே திட்ட ஆரம்பித்து விடுவோம். இன்னும் சிலர் அந்தக் கதவையே எட்டி உதைப்பதும் கூட உண்டு. இது வெல்லாம் கோபம் என்ற பைத்தியக் காரத்தனத்தின் வெளிப்பாடு.

கோபத்தின் மூலம், நன்மையா? தீமையா? என்று சிந்தித்துப் பார்த்தால்…. நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும். சே… அவசரப்பட்டு விட்டோமே… அந்த நேரத்தில் நாம் ஏன் அப்படி நடந்து கொண்டோம்? இந்தக் கேள்வியைத் தாண்டி வராத மனிதர்களே யாரும் இருக்க முடியாது. கோபத்தோடு ஒருவன் இடத்திலிருந்து எழுகிறான் என்றால் … அவன் நஷ்டத்தோடுதான் உட்கார வேண்டியது ஏற்படும். கோபத்தில் ஒருவனைப் பழிவாங்குவதைவிட, அவனை மன்னித்து விடுவதில் நமக்குப் பல்வேறு பயன்கள் உண்டு என்பதை முதலில் புரிந்துகொள் வேண்டும்.

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாயின் உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காணபீர்கள். (41:34)

ஒருவனை மன்னிப்பதின் மூலம் அவனுடைய அன்பு, நன்றி உணர்வு போன்றவற்றை இலவச இணைப்பாகவும் பெற முடியும். இதற்கு மாற்றமாக நாம் கோபப்பட்டால் அதனால் நம்முடைய எனர்ஜி அதிக அளவில் செலவாகிறது. உடல் மற்றும் மன அமைதி கெடுகிறது என்பது மாத்திரமல்ல; எதிராளியின் தொடர் கோபம் மற்றும் பகைமைக்கும் ஆளாகிறோம். கோபத்தில் ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதின் மூலம் எதிரிகளில் ஒருவனை அதிகமாக்குவது அறிவுடமையா? இல்லை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மூலம் புதிதாக ஒரு நண்பனை அடைது அறிவுடமையா? என்பதை நீங்களே சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் நெறிநூலாகிய அல்குர்ஆன் கூறுகிறது: நிலைகுலையாது நின்று மன்னிக்கும் மாண்புடையோர், நிச்சயமாக இது உறுதி படைத்த நெஞ்சினரின் பணியாகவன்றோ உள்ளது? (42:43)

எனவே, அவர்களை மன்னித்து, புறக்கணித்து விடுவீராக! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (5:13)

நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்; ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால், ஏளனம் செய்தால், குறை கண்டால், பலருக்கு மத்தியில் மானபங்கப்படுத்தினால், அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ, அவமானப்படுத்தவோ வேண்டாம்! ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே-செய்த அந்தச் செயலே அவனை அவமானப்படுத்தப் போதுமான ஒன்றாகும். (அபூதாவூத்)

அதெப்படி…. ஒருவன் நம்மை அவமானப்படுத்தும் போது நாம் மட்டும் சும்மா வாயைப் பொத்திக் கொண்டு அமைதி காப்பது? நாக்கைப் புடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டால் தானே, மனது ஆறும்! என்று நீங்கள் கேட்கலாம்… உங்கள் மனதை ஆறுதலாக்க கூடிய இந்த நபி மொழியைக் கொஞ்சம் சிந்தியுங்கள்!

ஒருவன் இன்னொருவனைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அது குறிபார்த்து எறியப்பட்ட அம்புபோல நேரே எதிராளியைப் போய் தாக்கி விடுவதில்லை. அந்த வார்த்தை சிலபல இடங்களுக்குப் பயணப் படுகிறது. முதலாவதாக அது வானத்தின் பக்கம் செல்கிறது. ஆனால் வானத்தின் கதவுகள் மூடப் பட்டிருக்கும். உடனே அது இந்த பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. இங்கே பூமியின் கதவுகளும் மூடப்பட்டு விடும். எனவே அந்த வார்த்தை இங்கும் அங்குமாக இடம் தேடி அலையும். எங்கேயும் அதற்கு இடம் கிடைக்காது. இதற்குப் பின் தான் அது எதிராளியிடம் செல்லும். சென்ற உடனேயே அது அவனைத் தாக்கி விடுவதில்லை. அதற்கு அவன் உரித்தானவனா என்று கொஞ்ச நேரம் நின்று யோசிக்கும். உரித்தானவன் என்றால் அது அவனைச் சென்றடையும். இல்லையயன்றால் …. சுவற்றில் எறியப்பட்ட பந்துபோல் எறிந்தவன் மீதே திரும்ப வந்து பாயும். நபி(ஸல்) அவர்கள் சொன்ன தெளிவான அந்த செய்தியானது அபூதாவூத் என்ற நபி மொழி நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

நம்மீது எறியப்பட்ட சொல்லம்புகள், நமக்கானது இல்லை என்கிற போது அதை நினைத்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அதற்காக கோபப்பட்டு நம் எனர்ஜியை நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்? இத்தகைய மனோநிலை, நம் வீட்டில், சமூகத்தில், மக்கள் தொடர்பில் வந்து விட்டால் பிரச்சனைகள் தோன்றுமா? குழப்பங்கள் உருவாகுமா? சிந்தியுங்கள்?

நமக்குத் துன்பம் தருபவர்களைத் தேடிக் கண்டு பிடித்து பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது ஒரு நல்ல முஸ்லிமுக்குரிய அடையாளம் அல்ல! ஒரு நாய் கடித்து விட்டது என்பதற்காக அதைத் தேடிக் கண்டு பிடித்து கடிக்கவா செய்கிறோம்? அப்படிச் செய்பவன் அறிவாளியா.

Wednesday, July 28, 2010

ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது...


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நரகத்தின் வாயிலை மூடச்செய்கின்ற அல்லாஹ்வின் அருள்மழைப் பொழியும் அருமைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானுக்கு விலங்கிட்டு மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்துவமிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானின் தூண்டுதலால் நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு நிரந்தர சுவனத்தின் எல்லை இல்லா இன்பத்தை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கை நீட்டியவர்களுக்கு கையிலுள்ளதைக் கொடுத்து கண்ணீரைத் துடைக்கத் தூண்டும் காருண்ய மிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நன்மை – தீமைகளைப் பிரித்தறிவித்த மனிதவள மேம்பாட்டிற்கு வழி வகுத்த மாமறைக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

தலையில் பிறந்தோன் – காலில் பிறந்தோன், என்று ஆதிக்க வர்க்கத்தினர் பூட்டிய அடிமை விலங்கை உடைத்தெறிந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்றுக்கூறி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திய சங்கைமிகு குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கருப்பன் - சிவப்பன் என்ற நிறவெறியை காலில் போட்டு மிதித்து அனைவரும் ஆதம் என்ற ஒரு மனிதரின் பிறப்புகளே என்று முழங்கிய அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அழகிய உபதேசங்களை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

பெண் இனத்தின் உடலில் உயிரோட்டம் இருக்கிறதா ? என்ற ஆய்வுக்குட்படுத்திய சித்ரவதையிலிருந்து மீட்டெடுத்து அவளும் உன்னைப் போன்ற மனித இனமே என்று முழங்கி பெண் இனத்தை அழிவிலிருந்து மீட்டி சமூக நீதிக்காத்த திருமறைக்குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஆண்டவன் பெயரால் அப்பாவி மக்களை சுரண்டி வயிறு வளர்த்த புரோகிதக் கூட்டங்களை ஒழித்துக்கட்டி அல்லாஹ் ஒருவன் என்றக் கொள்கையை முழங்கிய மாமறைக் குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

அன்புள்ள சகோதரர்களே !

நன்மைகள் அதிகரிக்கவும் பாவங்கள் மன்னிகப்படவும், நல்ல எண்ணத்துடன் ரமளான் மாதத்தை அணுகுங்கள் அவரவரின் எண்ணத்திற்கேற்ப அவரவர்களுககு கூலி வழங்க காத்திருக்கிறது ரமளான் நோன்பு.

ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.' நூல்: புகாரி. 1899.

ரமலான் மாதத்தில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) கூறினார். நூல்: புகாரி.1901



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


நன்றி : அதிரை ஏ.எம்.பாரூக்

Saturday, July 10, 2010

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம் !

திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.

திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.

''நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்'' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً

''நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்'' (அல்குர்ஆன் 4:19)

இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். இது எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் - மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா என்ன?
அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான். 'நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும்.எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.

''இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.

''பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது - அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.

இதுபோல் தான், பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.

இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை.அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.

இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.இனிய இல்லறத்தில் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் பல உள்ளன. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான்.

மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும். ஆண் வர்க்கத்துக்கு அல்லாஹ் கூறும் அறிவுரையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும்!

Tuesday, April 13, 2010

செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே!பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்:முஸ்லிம் 2911)

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட''என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 56)

''உண்ணும் போதும்,உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள்.மனைவியிடம்
வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.''(அறிவிப்பாளர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: அஹ்மத் 19160)

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,நூல்: முஸ்லிம் 2915)

''பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள்.ஒரே (குண) வழியில்
உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால்
அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக)
நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும்''என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2913)

''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம்.பிறகு அதே நாளின்
இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்''என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரி 5204)

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள்
என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல்
இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று
கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்:
அபூதாவூத் 1830, அஹ்மத் 19162)

''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில்
நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து
விளங்குபவரே!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மதி 1082)
''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப்
போதுமானதாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.(அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு,நூல்:அபூதாவூத் 1442)

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி
அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள்
பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின்
பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன்
விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய
குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள்
விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 5200)

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம்
இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள
தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி
அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு
முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே
நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத்
தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள்.'' (
அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 2481)

--
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً
وَقِنَا عَذَابَ النَّارِ

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

Wednesday, February 3, 2010

ஒளுச் செய்ய உதவி செய்யும் நவீன கருவி கண்டுபிடிப்பு.


முஸ்லிம்கள் தொழுகைக்காக தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒளுச் செய்ய அவர்களுக்கு உதவி செய்யும் நவீன கருவியொன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

குறைந்த அளவே தண்ணீரைப் பயன்படுத்தி ஒளுச் செய்ய இது உதவும் என்று இதைக் கண்டுபிடித்த மலேசிய நிறுவனம் AACE டெக்னாலஜீஸ் தெரிவித்துள்ளது.

இந்தப் பச்சை நிற உபகரணத்தில் தொட்டியுடன் தானியங்கி உணர்விகள் (Automatic Sensors) உள்ளனவாம். மேலும், ஒளுவின் போது, குர்ஆனிலிருந்து பிரார்த்தனை வசனங்களையும் இது ஒலித்தவண்ணம் இருக்குமாம்.

"வருங்காலங்களில் நீர் வீணடிப்பைத் தடுப்பதும், நீரைச் சேமிப்பதும் இன்றியமையாததாக இருக்கும் இந்தக் கருவியின் மாதிரி செயற்பாட்டை கோலாலம்பூரில் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

ஆறுமாத காலங்களில் சந்தைக்கு வர இருக்கும் இந்தக் கருவி தொடக்கத்தில் 3000 முதல் 4000 அமெரிக்க டாலர்கள் வரை விலை வைக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த ஹஜ்ஜின் போது, ஏறத்தாழ இருபது இலட்சம் மக்கள் ஒளுச் செய்ய, தினமும், சுமார் 50 இலட்சம் லிட்டர்கள் நீர் பயன்படுத்தபட்டுள்ளது. இந்த உபகரணத்தால் அதில் 40 இலட்சம் லிட்டரை, தினமும் மிச்சப்படுத்த முடியும்.

துபாய் விமானநிலையத்தில், விரைவில், இந்தக் கருவிகளை நிறுவ உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Wednesday, January 27, 2010

அல்குர்ஆன் சொல்லும் தன்னந்தனியே நிற்கும் நாள்.........

அல்குர்ஆன் :
73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.
82:1. வானம் பிளந்து விடும்போது
82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4. கப்றுகள் திறக்கப்படும் போது,
82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
81:1. சூாியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது
101:4.அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
80:34.அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:35.தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36.தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37.அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல
39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
50:41.மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
50:42. அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மாித்தோர்) வெளியேறும் நாளாகும்.
36:51. மேலும், ஸுர் ஊதப்படடதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
36:52. ''எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?"" என்று அவர்கள் கேட்பார்கள்
39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
19:80.இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
50:22.''நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது."" (என்று கூறப்படும்).
10:45.அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள் ; அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.
79:35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
23:101.எனவே ஸ_ர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாாித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
44:41.ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.
82:19. அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
3:30. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;.
14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவாகளாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங்க கொண்டு) சூணியமாக இருக்கும்.
18:48.அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வாிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ''நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்"" (என்று சொல்லப்படும்).
18:49.இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ''எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பொியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே!"" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்
24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.
41:20.இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராகன அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
41:21.அவர்கள் தம் தோல்களை நோக்கி, ''எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்?"" என்று கேட்பார்கள்; அதற்கு அவை; ''எல்லாப் பொருட்களையும் பேசம் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசம்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்"" என்று கூறும்.
70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.
70:11.அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாாித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிாியப்படுவான்: தன் மக்களையும்-
70:12.தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
70:13.அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
70:14.இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிாியப்படுவான்).
52:46. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ''என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
69:26. ''அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
69:27. ''(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
69:28. ''என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
69:29. ''என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!"" (என்று அரற்றுவான்).
69:30. ''(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அாிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.""
69:31. ''பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு; ''அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?"" எனக் கூறுவான்.


" அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்டுவானாக ஆமீன்"

Tuesday, January 26, 2010

கோபம் தன்னையே அழித்து விடும்




உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்...
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...

· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...

· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...

· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...இப்படியே பல காரணங்கள் உள்ளன.
ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.
ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.
கோபம் தன்னையே அழித்து விடும்
மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.
ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.
கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...

· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

· மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:


1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்

7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.