மக்கள் உரிமை படியுங்கள்

Tuesday, February 9, 2010

இலங்கை ராணுவ மாஜி தளபதி சரத் பொன்சேகா திடீர் கைது


கொழும்பு: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நேற்றிரவு கைது செய்யப்பட்டார். ராணுவ போலீசார் அவரை கைது செய்தனர். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்ஷேயை எதிர்த்துப் போட்டியிட்டவர் அந்நாட்டு ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

கடந்த மாதம் 27ம் தேதி, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது, கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பொன்சேகா, தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டுவதற்கு, சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்க விசா தருவதில் அதிக கட்டுப்பாடு


மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை பார்ப்பதற்கான விசா வழங்குவதற்கான நிபந்தனைகளை, அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் உள்ளனர். சமீப காலமாக, இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. மாணவர்கள் விசாவில் வந்த பலர், பகுதி நேரமாக வேலை செய்கின்றனர். இன்னும் சிலர், ஆஸ்திரேலியாவுக்கு வந்து சமையல் கலை, சிகையலங்கார படிப்புகளை படித்து விட்டு, இங்கேயே வேலை தேடி நிரந்தரமாக தங்க விரும்புகின்றனர்.

இந்த முறையில் ஏராளமான வெளிநாட்டு இளைஞர்கள், ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை பார்ப்பதற்கான விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், சமையல்காரர், சிகையலங்காரம் தொழில் செய்வதற்காக விண்ணப்பித்த 20 ஆயிரம் பேரின் விசா விண்ணப்பத்தை, ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. இது குறித்து குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் ஈவான்ஸ் குறிப்பிடுகையில், "சிகையலங்காரம், சமையல் கலை போன்ற துறைகளில் விண்ணப்பித்து விட்டு, சில கல்வி நிலையங்களைஆரம்பித்து ஏராளமான மாணவர்களை ஏமாற்றுகின்றனர். இதற்காக இந்த துறைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விசா வழங்கவில்லை. மாறாக நர்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆசிரியர், டாக்டர் போன்ற வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டுள்ளோம்' என்றார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதை தவிர்க்க, அவர்கள் ஏழைகளை போல தோற்றமளிக்க வேண்டுமென, விக்டோரியா மாநில போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார். இதற்கு மாணவர் சங்கங்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அர்த்தமில்லாமல் தேவையற்ற வகையில், விஷயத்திற்கே சம்பந்தமில்லாத வகையில் கூறப்பட்ட கருத்து என்று இந்த அமைப்புகள் குறை கூறியுள்ளன.

சிறுபான்மையினர் முன்னேற்றம் உறுதியான நடவடிக்கை தேவை - காங்கிரஸ்


புதுடெல்லி, பிப்.9:சிறுபான்மை மக்கள் முன்னேற்றத்துக்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.ஆந்திராவில் அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 4 சதவீதம் அளிக்க அந்த மாநில அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்று ஆந்திர உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் அரசு வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா அறிவித்துள்ளார்.

இந்த நிலவரம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி டெல்லியில் நேற்று கூறியதாவது:சிறுபான்மை மக்களை தேசிய வளர்ச்சியில் ஒருங்கிணைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை கறுப்பு, வெள்ளை என்ற கோணத்தில் பார்க்க கூடாது. இந்தப் பிரச்னையிலும், ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முடிவிலும் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன.இவ்வாறு திவாரி கூறினார்.

மேற்கு வங்க அரசு பணியில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு


மேற்கு வங்கத்தில் அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.இது குறித்து கொல்கத்தாவில் புத்ததேவ் பட்டாச்சார்யா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
முஸ்லிம்களுக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன் கடந்த ஆண்டு மத்திய அரசிடம் அறிக்கை அளித் தது.
இதில் மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்காமல் அறிக்கையை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் சமூக, கல்வி, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரசு பணிகளில் 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏற்கனவே 7% இடஒதுக்கீடு உள்ளது. பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் இவ்வாறு புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.
இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் கூறுகையில்,"மத அடிப்படையில் இல்லாமல் சமூக, கல்வி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தேவைப்படுகிறது" என்றார்.கொல்கத்தா மாநகராட்சிக்கு மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இது முன்னோட்டமாக கருதப்படும் நிலையில்,முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

"மாஷாஅல்லாஹ்"