
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை பார்ப்பதற்கான விசா வழங்குவதற்கான நிபந்தனைகளை, அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் உள்ளனர். சமீப காலமாக, இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. மாணவர்கள் விசாவில் வந்த பலர், பகுதி நேரமாக வேலை செய்கின்றனர். இன்னும் சிலர், ஆஸ்திரேலியாவுக்கு வந்து சமையல் கலை, சிகையலங்கார படிப்புகளை படித்து விட்டு, இங்கேயே வேலை தேடி நிரந்தரமாக தங்க விரும்புகின்றனர்.
இந்த முறையில் ஏராளமான வெளிநாட்டு இளைஞர்கள், ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை பார்ப்பதற்கான விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், சமையல்காரர், சிகையலங்காரம் தொழில் செய்வதற்காக விண்ணப்பித்த 20 ஆயிரம் பேரின் விசா விண்ணப்பத்தை, ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. இது குறித்து குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் ஈவான்ஸ் குறிப்பிடுகையில், "சிகையலங்காரம், சமையல் கலை போன்ற துறைகளில் விண்ணப்பித்து விட்டு, சில கல்வி நிலையங்களைஆரம்பித்து ஏராளமான மாணவர்களை ஏமாற்றுகின்றனர். இதற்காக இந்த துறைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விசா வழங்கவில்லை. மாறாக நர்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆசிரியர், டாக்டர் போன்ற வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டுள்ளோம்' என்றார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதை தவிர்க்க, அவர்கள் ஏழைகளை போல தோற்றமளிக்க வேண்டுமென, விக்டோரியா மாநில போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார். இதற்கு மாணவர் சங்கங்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அர்த்தமில்லாமல் தேவையற்ற வகையில், விஷயத்திற்கே சம்பந்தமில்லாத வகையில் கூறப்பட்ட கருத்து என்று இந்த அமைப்புகள் குறை கூறியுள்ளன.
No comments:
Post a Comment