தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.
"என்னால் முடியும்" என்று நினைப்பது தன்னம்பிக்கை. "என்னால் மட்டுமே முடியும்" என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விஷமாக உள்ளது. இதை விளக்க உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் இந்த இரண்டுமே ஒரே நபரிடத்தில் எப்படி விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் காண வேண்டுமென்றால் ஹிட்லரின் வாழ்க்கையைப் பார்த்தால் போதும்.
அசாதாரணமான அறிவும், தன்னம்பிக்கையும் கொண்ட ஹிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933ல் ஹிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். "எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்." சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார். எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிப அபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது.
ஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரது நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவுகளை இன்னமும் கூட சரியாக கணிக்க முடியவில்லை என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
தன்னம்பிக்கை ஏற்படுத்திய வளர்ச்சியையும், கர்வம் ஏற்படுத்திய பேரழிவையும் ஒரே மனிதனின் வாழ்க்கையில் ஆதாரபூர்வமாக சரித்திரம் சொல்கிறது. ஹிட்லரின் வாழ்வில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் இந்த இரண்டுமே இதே விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியவை. அதுவே இயற்கையின் நியதி.
எனவே தன்னம்பிக்கையுடன் இருங்கள். அது தான் உங்களை உயர்த்தக் கூடியது. உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கப் போவதும் அந்த தன்னம்பிக்கை தான். ஆனால் அது கர்வம் என்ற விஷமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தன்னை உயர்வாக நினைக்கும் அதே சமயம் மற்றவர்களைத் தாழ்வாக நினைக்கவும் ஆரம்பித்தால் கர்வம் நுழைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். தன் சாதனைகளைப் பெருமைப்படுத்தியும், மற்றவர் சாதனைகளை சிறுமைப்படுத்தியும் நினைப்பதும் கர்வமே. தன் தவறுகளை தவறுகளே அல்ல என்று சாதிப்பதும் கர்வத்தின் ஒரு குணமே. மற்றவர்களுடைய சிறு தவறுகளையும் சுட்டிக் காட்டி மகிழ்வதும் கர்வத்தின் தன்மையே. தனக்கு எதிரான எதையும் சகிக்க முடியாததும், மற்றவர் சாதனையை ரசிக்க முடியாததும் கர்வத்தின் செயல்களே.
அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது போல, மேலே சொன்ன கர்வத்தின் அடையாள குணங்கள் நம்மிடம் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. அடைந்த உயர்வில் இருந்து சறுக்கி விழாமல் இருக்கவும் மேலும் உயரவும் அது தான் ஒரே வழி.
நன்றி
------------------
சகோ.அன்சர்
------------------
Saturday, November 20, 2010
சிறுநீரகக் கோளாறுகளை எதிர்க்கும் மாதுளைச் சாறு: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
லண்டன்: மாதுளம்பழச் சாறுக்கு சிறுநீரகக் கோளாறுகளை எதிர்க்கும் சக்தி உள்ளது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாதுளம் பழம் உடல் நலனுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் மாதுளைச் சாறு சிறுநீரகக் கோளாறுகளை எதிர்த்துப் போராடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சீறு நீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு மாதுளைச் சாறு கொடுத்தனர். இதில் அவர்களின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டைக் கண்டறிந்தனர்.மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ஸ் தான் இதற்கு காரணம்.
டயாலிசிஸ் செய்யும் முன் சிறுநீரக பாதிப்புள்ளவர்களுக்கு மாதுளம்பழச் சாறு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்த நூற்றாண்டில் சிறு நீரகக் கோளாறு அதிக அளவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஆராய்ச்சியைமறுபடியும் மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர் டாக்டர் பாட்யா கிரிஸ்டல் கேட்டுக் கொண்டுள்ளார்.மாதுளை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கும், கருத்தரிப்புத் திறனை அதிகரிக்கும், வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)