Monday, March 8, 2010
மகளிர் இடஒதுக்கீடு மசோதா முஸ்லிம், தலித்துக்கு எதிரான சதி
லக்னோ, மார்ச் 8: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம் முஸ்லிம்கள், தலித்துகளை நாடாளுமன்றத்துக்கு வரவிடாமல் தடுக்க சதி நடப்பதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் முலாயம் சிங் யாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு சமாஜ்வாடி கட்சி எதிரானது அல்ல. ஆனால், அந்த இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும். இப்போது உள்ள நிலையிலேயே மசோதாவை நாங்கள் ஆதரிக்க முடியாது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் முற்பட்ட வகுப்பினர் மட்டுமே பலனடைவர்.
மகளிர் மசோதா மூலம் முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோரை நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளுக்கு வரவிடாமல் தடுக்க சதி நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ. கட்சிகள் எப்போதுமே முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் எதிரானவை. எனவே, அரசியல் சட்டத்தை திருத்த விரும்புகின்றனர். குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து முஸ்லிம் எம்.பி. ஒருவர் கூட இல்லை. நிலைமை இப்படி இருக்கும்போது இடஒதுக்கீடு இல்லாமல் முஸ்லிம் பெண்கள் எப்படி நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட முடியும்?
மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆபத்தானது. இப்போது உள்ள நிலையிலேயே மசோதா நிறைவேறினால், முஸ்லிம், தலித்துகள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட முடியாது. அவர்களது தலைமை வளரக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது. பெண்களை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் உண்மையான நோக்கமாக இருந்தால் கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை.
காங்கிரஸ், பா.ஜ. கட்சி எம்.பி.க்களே மகளிர் மசோதாவுக்கு எதிராக உள்ளனர். ஆனால், கட்சித் தலைமையில் முடிவை எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் அடிமைகளாக உள்ளனர். மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிப்பதற்கு பதிலாக எல்லா கட்சிகளும் தேர்தலில் 20% பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.
இவ்வாறு முலாயம் சிங் யாதவ் கூறினார்.
லாலு எதிர்ப்பு: பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு அளித்த பேட்டியில், ‘‘பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை நசுக்கும் வகையில் மகளிர் மசோதா உள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதவை கடுமையாக எதிர்ப்போம். மகளிர் மசோதா ஒரு அரசியல் தவறு. மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரட்டை வேடம் போடுகிறார். ஏற்கனவே, மசோதாவை எதிர்த்த இவர் இப்போது, பா.ஜ.வை திருப்திப்படுத்துவதற்காக ஆதரிக்கிறார். இந்த ஆண்டு சட்டப் பேரவைக்கு தேர்தல் வருவதை மனதில் கொண்டு பா.ஜ.வை அனுசரித்து செல்கிறார்’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment