கொழும்பு : இலங்கையின் அதிபராக, ராஜபக்சே 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற சரத் பொன்சேகாவை விட 18 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று ராஜபக்சே அபார வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் ராஜபக்சே 50 லட்சம் வாக்குகளும், பொன்சேகா 32 லட்சம் வாக்குகளும் பெற்றுள்ளனர்.அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் வெடி வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் இவ்வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நேற்று நடந்த தேர்தலில், 70 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஓட்டுப் பதிவு முடிந்த அடுத்த சில மணி நேரத்திலேயே ஓட்டு எண்ணும் பணி விறுவிறுப்பாக துவங்கியது.மொத்தம் 22 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். ஆளுங்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கும், எதிர்க் கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் நடக்கும் தேர்தல் என்பதால், சர்வதேச அளவில் இதன் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வன்முறைகளை தவிர்க்கும் வகையில், நாடு முழுவதும் 68 ஆயிரம் போலீசாரும், ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தாலும், ஓட்டுப் பதிவு துவங்குவதற்கு முன்னரே, தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியில் பல்வேறு இடங்களில், தொடர்ச்சியாக கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதனால், மக்களிடையே பீதி ஏற்பட்டது. இந்த குண்டு வீச்சு சம்பவங்களால், ஓட்டுப் பதிவு பாதிக்கப்படவில்லை என்று, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொன்சேகாவுக்கு ஓட்டு இல்லை: அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால், அவரால் ஓட்டளிக்க முடியவில்லை. இதையடுத்து, போட்டியில் இருந்து அவரது பெயர் தகுதி நீக்கம் செய்யப்படும் என, ஆளுங் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து இலங்கை தேர்தல் கமிஷனர் திசநாயகா கூறுகையில், ""வாக்காளர் பட்டியலில் சரத் பொன்சேகாவின் பெயர் இல்லை என்ற காரணத்துக்காகவோ அல்லது அவர் ஓட்டளிக்கவில்லை என்பதற்காகவே, போட்டியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது. ""அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், அவரது வெற்றியை செல்லாது என, அறிவிக்க முடியாது,'' என்றார்.
தமிழர்கள் ஓட்டு பெற்றும் தோல்வி : இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், தமிழர்கள் யாருக்கு ஓட்டளித்தனர் என்ற குழப்பம் நீடித்தது. இலங்கையில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களும் பங்கேற்று ஓட்டளித்தனர். அந்த பகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது. இருந்தாலும், இலங்கையின் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ஓட்டுப் பதிவு குறைவாகவே இருந்தது. தமிழர்கள் ஓட்டு தான், அதிபர் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் ஓட்டாக கருதப்பட்டது. தமிழர்கள் பகுதியில் பொன்சேகா அதிக வாக்கு பெற்றும் அவர் தோல்வி அடைந்துள்ளார். தமிழர் பகுதிகளில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உயிர் பயத்தில் பொன்சேகா : இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான சரத் பொன்சேகா குற்றம்சாட்டி உள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் பொன்சேகா தனது இல்லத்தில் தங்காது, கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே முறைகேடு செய்துள்ளார்; தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் என்னை கொலை செய்துவிடும்படி இலங்கை ராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்; இதனால் இலங்கை ராணுவத்தினர் நான் தங்கி இருக்கும் ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளதுடன், அங்கிருக்கும் பொதுமக்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்; அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment