மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, June 17, 2010

சிங்கப்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு-பல லட்சம் பொருட்களுக்கு சேதம்



சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சிறு வியாபாரிகள் அதிகம் உள்ள பகுதியான ஆர்ச்சர்ட் சாலையில், கன மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து, வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.இந்த வெள்ளத்தில் வெளிநாட்டு பொருட்கள் பெருமளவில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் வழக்கமாக சிங்கப்பூரில் பெய்யும் மழையின் அளவில் 60 சதவீத அளவு, அதாவது 101 மில்லிமீட்டர் மழை ஒரே நாளில் பெய்ததால் வந்த வினை இது. இந்த பெரு மழையால் சிங்கப்பூரின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஆர்ச்சர்ட் சாலை வணிக வளாகங்கள்தான்.இந்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பல விலை உயர்ந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக சிறு வியாபாரிகள் குமுறியுள்ளனர். தங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள மழை நீர் வடிகால் வசதிகள் சரியில்லாததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.கடுமையான வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் துணி விற்பனையகமான மாஸிமோ துத்தி, ஹெர்ம்ஸ் பொத்திக் ஆகியவையே.கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில்லை என்கிறார்கள் வியாபாரிகள்.

சேத மதிப்பு குறித்து முழுமையாகத் தெரியவில்லை. வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னர்தான் அதை மதிப்பிட முடியும் என சிங்கப்பூர் சிறு வியாபாரிகள் சங்கம் மற்றும் ஆர்ச்சர்ட் வர்த்தக சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன.கன மழையில் சிக்கி பல்வேறு வணிக வளாகங்களுக்குக் கீழ் உள்ள கார் பார்க்கிங்குகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்களும் கூட சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: