மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, June 30, 2010

பிரதமர் மான்மோகன் சிங்கின் பொருளாதார பேச்சுக்களை உலகமே கவனிக்கிறது-ஒபாமா புகழாரம்.


டொராண்டோ: பொருளாதாரம் தொடர்பாகவும், பிற உலக விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மன்மோகன்சிங் கூறும் கருத்துக்களை உலகமே ஆர்வமாக கவனிப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். மேலும், தான் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவிருப்பதை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் கனடா சென்றுள்ளார். இந்த மாநாட்டின் போது அமெரிக்க அதிபரை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சர்வதேச பொருளாதாரம், பயங்கரவாதம் மற்றும் பொருளாதார தேக்க நிலை பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்.இந்த சந்திப்புக்கு முன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஒபாமா கூறியதாவது:நான் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு செல்லவிருப்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிரதமர் மன்மோகன்சிங் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக உலகிற்கு முன் மாதிரியாக இருக்கிறது. இந்திய கலாச்சாரம் செழுமையானதாக உள்ளது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆவலாக உள்ளேன். பொருளாதார துறையில் பிரதமர் மன்மோகன்சிங் ஆழ்ந்த அறிவுள்ளவர் என்பதால் அவர் பேசும்போது உலகமே ஆர்வத்தோடு கவனிக்கிறது. இந்திய-அமெரிக்க உறவுக்கு புதிய பொருள் கொடுக்க ஆவலோடு உள்ளேன் என்று அவர் கூறினார்.

முன்னதாக மன்மோகன்சிங் பேசும்போது அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்தியா சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் மாற்றம் கொண்டுவர என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறது என்பதை ஒபாமா இந்த பயணத்தின் போது நேரிலேயே பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

No comments: