Wednesday, June 23, 2010
கஸா நிவாரண உதவி கப்பல் படுகொலை சரியானதே - இஸ்ரேல் !!
உலகை நடுக்கிய, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தி 9 பேரைப் படுகொலை செய்தச் செயலை இஸ்ரேல் நியமித்த விசாரணைக் குழு நியாயப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது."சூழ்நிலைக்கு ஏற்றவாறே இஸ்ரேலிய இராணுவம் சமூகச் சேவகரைச் சுட்டுக்கொன்றது" என்றும் "அச்சம்பவத்தில் பிழையேதுமில்லை" என்றும் இஸ்ரேலிய கப்பல் படை நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
அதே சமயம், ஃபலஸ்தீனர்களுக்கு உதவி கொண்டு வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் எடுத்துக்கொண்ட முன்னேற்பாடுகளில் பல பிழைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. "இராணுவம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை; தேவையான உளவு தகவல்கள் சேகரிக்கவில்லை; துப்பாக்கிச் சூடு நடத்தும் முன்னர் தண்ணீர் பாய்ச்சியடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை உபயோகித்தும் கப்பலில் இருந்த சமூக சேவகர்களைக் கைது செய்வதற்கு முயற்சி செய்யவில்லை; இராணுவ உடை அணிந்திருக்கவில்லை" முதலியவைகளை இஸ்ரேலிய இராணுவம் செய்தத் தவறுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
துருக்கியைத் தலைமையாகக் கொண்டுப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எம்.பிக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் அடங்கிய ஃபலஸ்தீன் நிவாரண கப்பல், கஸாவை நெருங்கும் முன் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இஸ்ரேலிய இராணுவம் தடுத்து நிறுத்திக் கப்பலில் உள்ளவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 9 பேரைக் கொன்றதோடு, ஃபலஸ்தீன் அகதிகளுக்குச் சென்ற நிவாரண உதவிப் பொருட்களையும் கையகப்படுத்தியது. சர்வதேசச் சட்டங்களை மீறிய இஸ்ரேலின் இந்தச் செயல்பாட்டினைக் குறித்துச் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பை இஸ்ரேல் அங்கீகரிக்காமல், இஸ்ரேலிய கப்பல் படையினைக் கொண்டு அச்சம்பவத்தைக் குறித்து விசாரித்து அறிக்கைத் தரக் கேட்டுக் கொண்டது எனப்து குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment