மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, July 15, 2010

இந்திய ரூபாய்க்கான சின்னம்-மத்திய அரசு வெளியிட்டது


டெல்லி: சர்வதேச தரத்திலான இந்திய ரூபாய்க்கான சின்னத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குழு பல்வேறு சின்னங்களை ஆராய்ந்து உறுதியில், ஐஐடி கான்பூரில் படித்த மாணவரான உதயக்குமார் வடிவமைத்த சின்னத்தை தேர்வு செய்துள்ளது.மொத்தம் ஐந்து சின்னங்களை இந்தக் குழு ஆராய்ந்து அவற்றிலிருந்து உதயக்குமாரின் சின்னத்தை தேர்வு செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அமைச்சரவை இந்த சின்னத்தை தற்போது ஏற்ருக் கொண்டுள்ளது.தேவநாகரி எழுத்தான ‘Ra’ மற்றும் ரோமன் எழுத்தான ‘R’ ஆகியவற்றின் கலவையாக உதயக்குமார் உருவாக்கிய சின்னம் உள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் எண்ணத்தையொட்டி இந்த சின்னம் அமைந்துள்ளது.

பட்ஜெட் தாக்கலின்போது இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான ரூபாய்க்கான சின்னத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.தற்போது தேர்வாகியுள்ள சின்னத்தை நிதியமைச்சகம் அங்கீகரித்துள்ளது.இந்த சின்னத்தை வடிவமைப்பதற்காக போட்டி ஒன்றையும் நிதியமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கான பரிசாக ரூ. 2.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்திய ரூபாய்க்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில் டாலர், யென், யூரோ உள்ளிட்டவற்றின் வரிசையில் தனி சின்னத்தை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது.

புதிய சின்னம் உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இனிமேல் ‘Rs’ என்ற எழுத்து இனிமேல் பயன்படுத்தப்பட மாட்டாது. தற்போது ரூபிஸ் என்ற இந்த எழுத்தை பாகிஸ்தான், நேபாளம், இலங்கை ஆகியவையும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உதயக்குமார் உருவாக்கியுள்ள சின்னம் இந்தியாவின் மூவண்ணம் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. சின்னத்தில் உள்ள இரண்டு கிடைமட்டக் கோடுகளுக்கு இடையில் உள்ள இடம் இந்தியாவின் தேசியக் கொடியை நினைவூட்டுவதாக உள்ளது. இரண்டு பக்கவாட்டுக் கோடுகள் ‘equals to’ என்பதை நினைவூட்டுவதாக உள்ளது. அதாவது உலகப் பொருளாதாரத்திற்கு இந்தியப் பொருளாதாரம் சமமானது, எந்தவகையிலும் குறைந்ததில்லை என்பதை குறிப்பிடுவதாக இது அமைந்துள்ளது.

6 மாதத்தில் நடைமுறைக்கு வரும் ரூபாய்க்கான சின்னத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இன்னும் 6 மாதங்களில் இந்த குறியீடு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: