மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, February 10, 2010

துபாய் 'பர்ஜ் கலிபா'வில் மின்சார கோளாறு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு


துபாய்:உலகின் மிக உயரமான கட்டடமான துபாய், "பர்ஜ் கலிபா'வில், மின்சார கோளாறு மற்றும் பராமரிப்புப் பணி காரணமாக, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.துபாயில் உள்ள, "பர்ஜ் கலிபா' கட்டடம், இரண்டு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. உலகிலேயே மிக உயரமான கட்டடம் இது தான். 828 மீட்டர் உயரமுடைய இக்கட்டடத்தில், 160 தளங்கள் உள்ளன.இது பாலைவன அதிசயமாக கருதப்படுகிறது.

துபாயைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த கட்டடத்தை காண்பதற்காக அதிகளவு வரத் துவங்கியுள்ளனர்.இதனால், சர்வதேச அளவில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாக, "பர்ஜ் கலிபா' கருதப்படுகிறது.கட்டடத்தின் 124வது தளம், பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் இருந்தவாறு, துபாய் நகரத்தின் அழகை, பார்வையாளர்கள் ரசிக்கலாம். இதற்காக நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 1,250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இன்டர்நெட் மூலமும், முன்பதிவு செய்யப்படுகிறது.சமீபத்தில் இந்த தளம் திடீரென மூடப்பட்டது. பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு, டிக்கெட்டுக்கான நுழைவுக் கட்டணம் திருப்பிச் செலுத்தப்பட்டது. இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


பார்வையாளர் மாடம் மூடப்பட்டதற்கான காரணம் தெரியாமல், சுற்றுலா பயணிகள் குழம்பிப் போயினர். பின்னர் கட்டடத்துக்கு சொந்தமான, "எம்மார்' நிறுவனம் இதுகுறித்து சிறிய அறிவிப்பை வெளியிட்டது.அதில்,"கூட்டம் அதிகமாக இருந்ததால், பார்வையாளர் மாடத்துக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து மூடியிருந்ததால், குழப்பம் மேலும் அதிகரித்தது.பின்னர், "மின்சார பிரச்னை காரணமாக பார்வையாளர் மாடம் மூடப்பட்டுள்ளது' என, அறிவிக்கப்பட்டது.

பார்வையாளர் மாடம், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற விவரமும் வெளியிடப்பட வில்லை. இந்த கட்டடத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "மின்சார பிரச்னை காரணமாகவும், பராமரிப்பு பணிகளுக்காகவும், பார்வையாளர் மாடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீண்டும் செயல்படத் துவங்கும்போது, அதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும்' என்றார்.இச்சம்பவம் "பர்ஜ் கலிபா'வின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

1 comment:

Unknown said...

the font for numbering not supporting it is better to mention the font name also or attache the font if possible.