Saturday, July 10, 2010
இன்சாட்-4பி செயற்கை கோளில் மின்சார கோளாறு: டிவி- தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு
இன்சாட்-4பி செயற்கைக் கோளுக்கு மின் சக்தி வழங்கும் சோலார் பேனல்களில் ஒன்று பழுதாகி விட்டதால், இந்தியாவில் சில டி.வி. சேனல்களின் ஒளிபரப்பும், சில தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.தொலைத்தொடர்பு மற்றும் டி.வி. சேனல்கள் ஒளிபரப்புக்காக பல்வேறு டிரான்ஸ்பான்டர்களுடன் கூடிய இன்சாட்-4பி செயற்கைக் கோள் கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்த இந்த 3 டன் எடை கொண்ட செயற்கைகோளின் ஆயுள்காலம் 12 ஆண்டுகள் ஆகும். அதில், 'க்யூ-பேண்ட்' டிரான்ஸ்பாண்டர்கள் 12, 'சி-பேண்ட்'டிரான்ஸ்பாண்டர்கள் 12 என மொத்தம் 24 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.இந்த செயற்கைக் கோளுக்கான மின் சக்தியை வழங்க, இரண்டு சோலார் பேனல்கள் உள்ளன. இவை சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றித் தருகின்றன.
இதில் ஒரு பேனலில் இருந்து மின்சாரம் உற்பத்தியாவது கடந்த 7ம் தேதி முதல் பாதிக்கப்பட்டது. இதனால், இன்சாட்-4பி செயற்கைக் கோளின் சக்தியானது 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது.இதனால் இப்போது 12 டிரான்ஸ்பாண்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. இதன்காரணமாக இந்த செயற்கைக் கோளை நம்பியிருந்த சேவைகள 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் சில டி.வி. சேனல்கள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இன்சாட் ரக செயற்கைக் கோள்களில் மின்சாரப் பிரச்சனை ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இரு முறை இந்த வகையான கோளாறுகள் ஏற்பட்டு, அவை பயனற்றுப் போயுள்ளன.
வேலூர் வி.ஐ.டி. மாணவர்கள் ஏவிய ராக்கெட்:
இதற்கிடையே வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ரோஹினி-200 (ஆர்.எச்) என்ற ராக்கெட் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.விண்ணில் செலுத்தப்பட்ட 2 நிமிடத்தில் ராக்கெட் 60 கிலோ மீட்டர் தூரத்தை எட்டியது.இந்த ராக்கெட்டில் வளிமண்டல ஆய்வு குறித்த கருவிகள் இடம் பெற்றிருந்தன. ராக்கெட் தயாரிப்பதற்கான முழு செலவையும் வி.ஐ.டி.பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment