மாநிலங்களவையில் இருந்து இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏழு எம்.பி.க்களில் கமல் அக்தர் (சமாஜ்வாடி) இஜாஜ் அலி (கட்சி சாராதவர்) ஆகிய இருவரும் நேற்று நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர். நிருபர்களிடம் அக்தர் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை பெண்களுக்காகவே நாங்கள் சபையில் குரல் கொடுத்தோம். இதற்காக நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். எம்.பி. பதவியை இழந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டோம். நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். மக்கள் கருத்தை சபையில் தெரிவிக்க எங்களுக்கு உரிமை உண்டு. உண்மையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் பெண்களிடம் இந்த அரசாங்கம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்திடம் இருந்து தான் வந்தது. சபைத் தலைவரிடம் இருந்து வரவில்லை. இது அரசாங்கத்தின் சர்வாதிகாரம். எங்களை பலவந்தமாக வெளியேற்றி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இஜாஸ் அலி கூறுகையில், ‘‘சபைக் காவலர்களை வைத்து எங்களை வெளியேற்றிதற்காக இந்த அரசாங்கம் தான் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அவர்கள் தவறான மசோதாவைக் கொண்டு வந்தார்கள். அதை தடுத்த காரணத்திற்காக நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்ப்பதில் காங்கிரஸ், பா.ஜ, இடதுசாரிகள் ஒன்று சேர்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.
No comments:
Post a Comment