மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, July 28, 2010

ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது...


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நரகத்தின் வாயிலை மூடச்செய்கின்ற அல்லாஹ்வின் அருள்மழைப் பொழியும் அருமைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானுக்கு விலங்கிட்டு மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்துவமிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானின் தூண்டுதலால் நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு நிரந்தர சுவனத்தின் எல்லை இல்லா இன்பத்தை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கை நீட்டியவர்களுக்கு கையிலுள்ளதைக் கொடுத்து கண்ணீரைத் துடைக்கத் தூண்டும் காருண்ய மிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நன்மை – தீமைகளைப் பிரித்தறிவித்த மனிதவள மேம்பாட்டிற்கு வழி வகுத்த மாமறைக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

தலையில் பிறந்தோன் – காலில் பிறந்தோன், என்று ஆதிக்க வர்க்கத்தினர் பூட்டிய அடிமை விலங்கை உடைத்தெறிந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்றுக்கூறி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திய சங்கைமிகு குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கருப்பன் - சிவப்பன் என்ற நிறவெறியை காலில் போட்டு மிதித்து அனைவரும் ஆதம் என்ற ஒரு மனிதரின் பிறப்புகளே என்று முழங்கிய அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அழகிய உபதேசங்களை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

பெண் இனத்தின் உடலில் உயிரோட்டம் இருக்கிறதா ? என்ற ஆய்வுக்குட்படுத்திய சித்ரவதையிலிருந்து மீட்டெடுத்து அவளும் உன்னைப் போன்ற மனித இனமே என்று முழங்கி பெண் இனத்தை அழிவிலிருந்து மீட்டி சமூக நீதிக்காத்த திருமறைக்குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஆண்டவன் பெயரால் அப்பாவி மக்களை சுரண்டி வயிறு வளர்த்த புரோகிதக் கூட்டங்களை ஒழித்துக்கட்டி அல்லாஹ் ஒருவன் என்றக் கொள்கையை முழங்கிய மாமறைக் குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

அன்புள்ள சகோதரர்களே !

நன்மைகள் அதிகரிக்கவும் பாவங்கள் மன்னிகப்படவும், நல்ல எண்ணத்துடன் ரமளான் மாதத்தை அணுகுங்கள் அவரவரின் எண்ணத்திற்கேற்ப அவரவர்களுககு கூலி வழங்க காத்திருக்கிறது ரமளான் நோன்பு.

ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.' நூல்: புகாரி. 1899.

ரமலான் மாதத்தில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) கூறினார். நூல்: புகாரி.1901



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


நன்றி : அதிரை ஏ.எம்.பாரூக்

Monday, July 26, 2010

சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகும் பள்ளிக்குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது !


இன்றைய குழந்தைகள் கம்ப்யூட்டர், டி.வி. முன்பு `தவம்' கிடப்பதால், அந்த சின்ன
வயதிலேயே குண்டாகிவிடுகிறார்கள். ஓடி விளையாடு பாப்பா' என்ற அறிவுரையையும்
இன்றைய குழந்தைகள் பலர் மறந்துவிட்டார்கள். இதனால், சர்க்கரைநோயும் அவர்களை
பதம் பார்த்துவிடுகிறது.பள்ளியில் படிக்கும்போதே உடல் நலக் கேடுகள் பிரச்சினைக்கு ஆளாகி சர்க்கரை நோய்பாதிப்புக்கு ஆளாகும் பள்ளிக்குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை இன்றைய குழந்தைகள் அதிகம் விரும்பி உண்கின்றனர். அதேநேரத்தில், நார்ச்சத்து மிகுந்த கீரைகள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது குறைந்துவிட்டது. சர்க்கரை சத்து அதிகம் கொண்ட உணவு பண்டங்களையும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

அத்துடன், விளையாட்டு உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் போதிய அளவு ஈடுபடாததும்
அவர்களது உடல் நலக் கேடுகளை அதிகரித்து விடுகிறது. இதனால் அவர்களுக்கும்
சர்க்கரை நோய் வந்துவிடுகிறது.

சரி... குழந்தைகளுக்கு சர்க்கரைநோய் வராமல் இருக்க என்ன செய்யலாம் ?

* குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், நெய் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த உணவுபொருட்கள் உண்பதை தவிர்த்துவிடுங்கள்.

* தினமும் ஒரு மணி நேரமாவது `வாக்கிங்' அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளச் சொல்லுங்கள். விளையாடுவதும் நல்லதுதான்.நீச்சல் பயிற்சியும் செய்யலாம்.

* அதிகநேரம் டி.வி. பார்ப்பதை தடுத்திடுங்கள். கம்ப்யூட்டர் முன்பும் மணிக்கணக்கில் ப்ரவுஸ் பண்ணச் சொல்லாதீர்கள். கம்ப்யூட்டரில் வீடியோகேம் விளையாடுவதையும் குறைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்.

உங்கள் குழந்தைகளை இப்படி `கன்ட்ரோல்' ஆக வளர்த்தால்,எதிர்காலத்தில்
சர்க்கரை நோய்போன்றவை வராமல் தடுக்கலாம்."இன்ஷாஅல்லாஹ்"

ஹிஜாப் தரும் சுதந்திரம் !!!


என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை

அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை
ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

----------------------------
நன்றி: சகோ.மின்ஹாஜ்
----------------------------

Saturday, July 24, 2010

போலி என்கெளண்டர்: சிபிஐயால் தேடப்படும் குற்றவாளி குஜராத் அமைச்சர் அமித் ஷா ராஜினாமா


அகமதாபாத்: சோராபுதீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீ ஆகியோரை போலி என்கெளண்ட்டரில் கொலை செய்ததாக சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட குஜராத் உள்துறை இணையமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தக் கொலைகளுக்கு சாட்சியான பிரஜாபதியையும் அமித் ஷா போலீசாரை வைத்து போலி என்கெளண்டர் நடத்தி கொலை செய்ததாகவும் வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அனுப்பிய சம்மன்களையடுத்து அமித் ஷா தலைமறைவானார். இதையடுத்து அவரைக் கைது செய்ய சிபிஐ தனிப் படைகளை அமைத்தது. அவரது அரசு அலுவலகத்திலும் சிபிஐ ரெய்ட் நடத்தியது.இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் நரேந்திர மோடியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார்.

நரேந்திர மோடியின் வலது கரமான இவர் மீது ஆள் கடத்தல்,கொலைகள்,கொலைச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளதால் எந்த நேரமும் கைதாகலாம் என்று தெரிகிறது.அவருக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மலிவு விலை லேப்டாப் ரூ.1500 மட்டுமே


மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் வெறும் ரூ.1500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அடுத்தாண்டு முதல் இது விற்பனைக்கு வரும்.புதுடெல்லியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த லேப்டாப்பை வடிவமைத்துள்ளது. இத்துறையின் அமைச்சர் கபில் சிபல் இதை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

இதுபோன்ற மலிவு விலை லேப்டாப்பை வடிவமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தபோது, தனியார் நிறுவனங்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இப்போது அத்தனை பெரிய நிறுவனங்களும் மலிவு விலை லேப்டாப் தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன. பெரிய தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இவற்றை தயாரிக்கும்போது, விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த லேப்டாப்பில் டச் ஸ்கிரீன், கீ போர்டு, 2 ஜி.பி.ராம் மெமரி,வை&பி இணைப்பு வசதி, யூஎஸ்பி போர்ட் ஆகியவை இருக்கும். அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு இவை விநியோகம் செய்யப்படும் என கபில் சிபல் தெரிவித்தார்.ஆரம்பத்தில் ரூ.500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது ரூ.1500 ஆகிவிட்டது.விரைவில் விலை ரூ.1000 ஆகக் குறைந்து,ரூ.500க்கு விற்பனை செய்ய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

Thursday, July 22, 2010

புதிய கல்லூரி தொடங்க முஸ்லிம்களுக்கு வக்பு வாரிய நிலம் !


புதிய கல்லூரிகள் தொடங்க முன்வரும் முஸ்லிம்களுக்கு வக்பு வாரிய நிலங்களை அளிக்க வாரியம் முன் வந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல்ரகுமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. 2020ம் ஆண்டுக்குள் தற்போதுள்ள 12.4 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக மாணவர் சேர்க்கையை உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக, பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில், “பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையை 700 ஆகவும், கல்லூரிகளின் எண்ணிக்கையை 25 ஆயிரமாகவும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிய கல்லூரிகளை தொடங்க முன்வரும் முஸ்லிம்களை ஊக்குவிக்க வாரியம் முன்வந்துள்ளது. இதன்படி, கல்லூரி தொடங்குவதற்கான நிலங்களை தமிழ்நாடு வக்பு வாரியம் வழங்கும். இந்த நல்ல வாய்ப்பை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, July 20, 2010

கணவன் மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டிய அணுகு முறைகள்...

குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)

அழகிய வரவேற்பு :

வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட. அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம்.வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.

இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும் :

நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும் :

மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.

விளையாட்டும் கவன ஈர்ப்பும் :

நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை...) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.இஸ்லாம் அனுமதிக்காத 'பொழுது போக்கு" விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி :

வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால். கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.

இனியவளின் ஆலோசனை :

குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)
மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.
மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.

பிறரைக் காணச் செல்லும்பொழுது :

மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.

உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது :

மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.

எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.

பொருளாதார உதவி :

கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.

அழகும் நறுமணமும் :

நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.
எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது. அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.

தாம்பத்யம் :

மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது.காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.
மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.இரகசியங்களைப் பாதுகாத்தல்
படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.

இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது :

தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை - நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.
ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.

அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.
உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.

இஸ்லாமியப் பயிற்சி :

கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :

* இஸ்லாத்தின் அடிப்படை
* அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
* படித்தல் மற்றும் எழுதுதல்
* இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
* பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
* வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.

மேன்மையான அக்கறை :

வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).

அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்.அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்).தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதைக் கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)

பொறுமையும் சாந்தமும் :
மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.

இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.


தவறுகளைத் திருத்துதல் :


முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).

மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.

குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.

மன்னிப்பும் கண்டிப்பும் :

பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).

சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.

பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.

உங்கள் இல்லறம் இனிமையாத் தொடர நல்வாழ்த்துகள்!


--------
நன்றி : சகோதரி புதைனா, லப்பைக்குடிக்காடு.காம்

Monday, July 19, 2010

இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்


நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை. சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை. ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று. சதா சர்வ நேரமும் தன்னை கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்?

இந்த அரசும், ஊடகங்களும் ‘முஸ்லிம் என்றாலே உடம்புக்குள் நான்கைந்து குண்டுகளை கட்டிக்கொண்டுதான் அலைகிறான்’ என்பதான பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. அவையே பொதுப்புத்தியை உற்பத்தி செய்கின்றன. அதனால்தான் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிக சிக்கலானதாக இருக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் மிக வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு வீடு மறுக்கப்படுகிறது.

நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது, அதில் ஒரு முஸ்லிம் இருந்தால் ’நீ எல்லாம் உங்க ஆளுகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவ’ என்று மற்றவர்கள் கமெண்ட் அடிப்பதும், அது இயல்பான ஒன்றாக இருப்பதும் எத்தகையது?

அப்பாவி முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்த இந்து தீவிரவாதிகள் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படுவது இல்லை; முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதும் இல்லை. அப்படியே வழக்கு நடத்தி, தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படுவது இல்லை. ஆனால் முஸ்லிம் கைதிகள் மீதான வழக்குகள் மட்டும் அதிவேகமாக நடத்தப்பட்டு அதிவேகமாக தண்டனை வாங்கித்தரப்படுகிறது. ப‌ல‌ர் விசார‌ணைகூட‌ இல்லாம‌ல் 5 ஆண்டுக‌ள், 10 ஆண்டுக‌ள் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

திண்ணியம் தொடங்கி கயர்லாஞ்சி வரை நாடெங்கும் இந்து அடிப்படைவாதத்தின் சாதி வெறிக்கு லட்சக்கணக்கான தலித் மக்கள் நாள்தோறும் பலியிடப்படுகின்றனர். இந்த சமூக அசிங்கங்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாத சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் முஸ்லிம்களின் சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி பூதாகரம் செய்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு 'தாலிபான் பிராண்ட் முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை' என்று தெனாவட்டாக எழுதியது இந்தியா டுடே. 'உன்னைப் போல் ஒருவன்' என்னும் கடந்த பத்தாண்டுகளின் மோசமான இஸ்லாம் காழ்ப்பு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதைப்பற்றிய எந்த குற்றவுணர்வுமின்றி உலக நாயகன் உலவுவதும் இந்தப் பின்னணியில்தான்.

இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் இதன் பெயர் மத சார்பற்ற நாடுதான். காவல் நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான். இந்த பெரும்பான்மைவாத பூதத்தின் அசிங்கமான பிடிக்கு இடையிலே முஸ்லிம்கள் அனுதினமும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. தங்கள் மீதான காழ்ப்பு மிகுந்த சொற்களை கண்டும் காணாமல் நகர்ந்துசெல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பான்மையை அனுசரித்துச் செல்லாத சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அடக்கி, ஒடுக்கப்படுகின்றனர். இதன் மறுவளமாக அப்துல் கலாம் பிராண்ட் முஸ்லிம்களை உற்பத்தி செய்து தனது ரத்தக்கறைகளை மறைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் இந்து பாசிஸ்ட்டுகள்.

மதம் என்பது மனிதனுக்கு அபீனைப் போன்றது என்றார் காரல் மார்க்ஸ். அது இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஆனால் யதார்த்தத்தை முன்வைத்தே நாம் பேச வேண்டியிருக்கிறது. தேச எல்லைகளைக் கடந்து உலக அளவில் ஒடுக்கப்படும் இனமாக இருப்பது இஸ்லாம்தான். அமெரிக்க வல்லாதிக்கம் தனக்கான முகமாக முதலாளித்துவத்தை சூடிக்கொண்ட கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகக் கட்டமைத்தது; இப்போதும் அது தொடர்கிறது. அதன் அடுத்த பதிப்பாக இப்போது உலக அளவில் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. இது வேறு எந்த மதத்துக்கும் நிகழாதது.

'கீற்று' இணையதளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி, இந்திய முஸ்லிம்களின் சமூக, அரசியல் வாழ்நிலை குறித்தான ஒரு அமர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள் தங்களது வேதனைகளை, வலிகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். நம்மிடையே உருவாக்கப்பட்ட, உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட முஸ்லிம் காழ்ப்பை நாம் கலைந்தாக வேண்டும். அச்சுமூட்டுவதாகவும், பதற்றம் தருவதாகவும் இருக்கும் தினவாழ்வில் இருந்து முஸ்லிம் மக்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்கான முற்போக்கு சக்திகளின் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக கீற்றின் ஆறாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி இந்த நிகழ்வை கீற்று இணையதளம் ஒருங்கிணைக்கிறது.

கீற்று இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா

நாள்: 24.07.2010, மாலை 5.00 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை.

அமர்வு - 1

இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்
(பாதிக்கப்பட்ட சகோதரர்களின் நேரடி வாக்குமூலங்கள்)

கருத்துரை:

வழக்கறிஞர் புகழேந்தி (ஒருங்கிணைப்புச் செயலர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்)

'தலித் முரசு' புனித பாண்டியன்

அமர்வு - 2

"குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால், அதுதானே மறைந்துவிடுமேயல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப்போல் வாழாது." - பெரியார், குடிஅரசு - தலையங்கம் - 01.05.1927

கீற்று.காம் - பயணமும், இலக்கும்

கருத்துரை:

சுப.வீரபாண்டியன்
விடுதலை இராசேந்திரன்
ஜெயபாஸ்கரன்
பாரதி கிருஷ்ணகுமார்
மாலதி மைத்ரி
பாஸ்கர் சக்தி
யுகபாரதி

அனைவரும் வருக

- கீற்று ஆசிரியர் குழு

தொடர்புக்கு: 99400 97994

---
நன்றி : கீற்று.காம்

Thursday, July 15, 2010

இந்திய ரூபாய்க்கான சின்னம்-மத்திய அரசு வெளியிட்டது


டெல்லி: சர்வதேச தரத்திலான இந்திய ரூபாய்க்கான சின்னத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குழு பல்வேறு சின்னங்களை ஆராய்ந்து உறுதியில், ஐஐடி கான்பூரில் படித்த மாணவரான உதயக்குமார் வடிவமைத்த சின்னத்தை தேர்வு செய்துள்ளது.மொத்தம் ஐந்து சின்னங்களை இந்தக் குழு ஆராய்ந்து அவற்றிலிருந்து உதயக்குமாரின் சின்னத்தை தேர்வு செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அமைச்சரவை இந்த சின்னத்தை தற்போது ஏற்ருக் கொண்டுள்ளது.தேவநாகரி எழுத்தான ‘Ra’ மற்றும் ரோமன் எழுத்தான ‘R’ ஆகியவற்றின் கலவையாக உதயக்குமார் உருவாக்கிய சின்னம் உள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் எண்ணத்தையொட்டி இந்த சின்னம் அமைந்துள்ளது.

பட்ஜெட் தாக்கலின்போது இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான ரூபாய்க்கான சின்னத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.தற்போது தேர்வாகியுள்ள சின்னத்தை நிதியமைச்சகம் அங்கீகரித்துள்ளது.இந்த சின்னத்தை வடிவமைப்பதற்காக போட்டி ஒன்றையும் நிதியமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கான பரிசாக ரூ. 2.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்திய ரூபாய்க்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில் டாலர், யென், யூரோ உள்ளிட்டவற்றின் வரிசையில் தனி சின்னத்தை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது.

புதிய சின்னம் உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இனிமேல் ‘Rs’ என்ற எழுத்து இனிமேல் பயன்படுத்தப்பட மாட்டாது. தற்போது ரூபிஸ் என்ற இந்த எழுத்தை பாகிஸ்தான், நேபாளம், இலங்கை ஆகியவையும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உதயக்குமார் உருவாக்கியுள்ள சின்னம் இந்தியாவின் மூவண்ணம் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. சின்னத்தில் உள்ள இரண்டு கிடைமட்டக் கோடுகளுக்கு இடையில் உள்ள இடம் இந்தியாவின் தேசியக் கொடியை நினைவூட்டுவதாக உள்ளது. இரண்டு பக்கவாட்டுக் கோடுகள் ‘equals to’ என்பதை நினைவூட்டுவதாக உள்ளது. அதாவது உலகப் பொருளாதாரத்திற்கு இந்தியப் பொருளாதாரம் சமமானது, எந்தவகையிலும் குறைந்ததில்லை என்பதை குறிப்பிடுவதாக இது அமைந்துள்ளது.

6 மாதத்தில் நடைமுறைக்கு வரும் ரூபாய்க்கான சின்னத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இன்னும் 6 மாதங்களில் இந்த குறியீடு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் குத்துச்சண்டை வீரரின் உம்ரா பயணம் !


அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.

"ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத்.மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க இன்ஷா அல்லாஹ் நாமும் பிராத்திப்போம்


நன்றி : சத்தியமார்க்கம்.காம்

Tuesday, July 13, 2010

என்ன நடக்கிறது காஷ்மீரில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவஹிருல்லாஹ் ஆற்றிய உரை...

சர்க்கரை வியாதியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ் !!!


சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான்.பராகுவேயில் பிரபலமான ஒரு செடி இப்போது உலகெங்கும் உள்ள சர்க்கரை வியாதியஸ்தர்களை பெரிதும் கவரத் தொடங்கியுள்ளது.அதன் பெயர் ஸ்டீவியா.அதன் தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரிபாடியானா (Stevia rebaudiana), சுருக்கமாக ஸ்டீவியா.

இந்த செடி மகா இனிப்பானது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சாறு அத்தனை இனிப்பு நிறைந்தது. இதை செயற்கை சர்க்கரை போல பயன்படுத்தி வருகின்றனர்- தென் அமெரிக்காவில். இத்தனை இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் இதன் விசேஷமே.இந்த செடியின் பூர்வீகம் தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகைச் செடியை பராகுவேயில் உள்ள குவாரனி என்ற இனத்தவர் ஸ்வீடனராக பயன்படுத்தி வருகின்றனர். மிகச் சிறிய அளவிலான இந்த செடியின் இலைகளில்தான் இந்த இனிப்புத் தன்மை காணப்படுகிறது. சாதாரண சர்க்கரையை விட இதன் இனிப்பு 300 மடங்கு அதிகமாகும்.

மேலும் சர்க்கரையி்ல் உள்ளது போல அல்லாமல், இந்த ஸ்டீவியாவில் கலோரி ஒரு துளி கூட கிடையாது. மேலும் ரத்தத்தில் நமது சர்க்கரையின் அளவையும் இது அதிகரிக்காது.
இந்த செடிக்கு பராகுவேயில் கா ஹே ஹே (kaa he-he) என்று பெயர். கா ஹேஹே என்றால் இயற்கை மூலிகை என்று பொருளாகும். ஸ்பெயின் நாட்டவர் பராகுவேக்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பிருந்தே இந்த ஸ்டீவியாவை பராகுவே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.நம் ஊரில் கடுங்காபி என்று சொல்வோமே அதேபோன்ற தேனீர் தயாரிப்பி்ல இந்த குவாரனி இனத்தவர் விசேஷமானவர்கள். அதற்கு இனிப்பு சேர்க்க சர்க்கரைக்குப் பதில் இந்த ஸ்டீவியா சாற்றைத்தான் கலக்கிறார்கள்.

இத்தாலியைச் சேர்ந்த தாவரவியல் நிபுணரான டாக்டர் மோய்சஸ் சான்டியாகோ பெர்டோனி என்பவர் 1800களின் இறுதியில்தான் இந்த ஸ்டீவியாவின் அருமையைக் கண்டுபிடித்தார். பராகுவேயில் உள்ள விவசாய கல்லூரியின் இயக்குநராக இருந்தவர் பெர்டோனி.அவரது கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பராகுவேக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஸ்டீவியா தென் அமெரிக்கா முழுவதும் பரவியது. மேலும், தென் அமெரிக்கக் கண்டத்தைத் தாண்டி அமெரிக்காவுக்கும் பரவியது.1918ம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்காவுக்கு ஸ்டீவியா செடி பயணித்தது. அங்கு அதை தோட்ட முறையில் பயிரிட்டு வளர்த்தனர். இருப்பினும் கூட வட அமெரிக்காவில் இது பிரபலமாகமலேயே இருந்து வந்தது.

1931ம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு வேதியியல் நிபுணர்கள், ஸ்டீவியா செடியின் இனிப்புத் தன்மைக்கு ஸ்டீவியோசைட் என்ற கூட்டுப் பொருள்தான் காரணம் என்பதை கண்டுபிடித்து அறிவித்தனர். இருப்பினும் ஜப்பானில்தான் இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்தனர்.ஸ்டீவியோசைடை எந்த அளவுக்கு இனிப்பு போல பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்த ஜப்பானிய விஞ்ஞானிகள், சாதாரணமாக பயன்படுத்தப்படும் சர்க்கரைக்குப் பதில் ஸ்டீவியோசைடின் பிரித்தெடுத்த வடிவத்தை பயன்படுத்த முடியும் என்பதையும் வெளியுலகுக்கு அறிவித்தனர்.

1988ம்ஆண்டு வாக்கில், ஜப்பானின் மாற்று சர்க்கரைச் சந்தையில் ஸ்டீவியோசைடின் பங்கு 41 சதவீதமாக எகிறியது. மேலும், ஐஸ் க்ரீம், பிரெட், பிஸ்கட், ஊறுகாய், கடல் உணவு, காய்கறிகள், குளிர்பானங்கள் என சகலத்திலும் ஸ்டீவியோசைடை பயன்படுத்த ஆரம்பித்தனர் ஜப்பானியர்கள்.இன்று ஸ்டீவியா செடியின் மகாத்மியம் பல நாடுகளிலும் பவி சீனா, ஜெர்மனி, மலேசியா, இஸ்ரேல், தென் கொரியா என பரவி விட்டது.அமெரிக்காவில் சமீப காலம் வரை ஸ்டீவியாவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவங்களின் இரு புதிய தயாரிப்புகளுக்கு இந்த ஸ்டீவியாவை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

கோக்கின் ட்ரூவியா மற்றும் பெப்சியின் பியூர்வியா ஆகியவற்றில் ஸ்டீவியாவின் சாறான ரெபியானாதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.உலக நாடுகளை மயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டீவியா தற்போது இந்தியாவுக்கும் வரவுள்ளது. இதுகுறித்து ஸ்டீவியா பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் கூறுகையில்,நறுமணம் மிக்க ஸ்டீவியா மூலிகைச் செடி செம்மண்ணிலும் பிற வளம் நிறைந்த மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. 50 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வளரக்கூடிய இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. இந்திய தட்பவெட்ப நிலையில் இந்த செடி நன்றாக வளரும். எனவே இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம். வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம்.

ஸ்டீவியா செடியின் இலை, விதை, தண்டு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்று இனிப்பு பொருள் ஆகும்.ஸ்டீவியா பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் அது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவும் என்பதும் கண்டு அறியப்பட்டு உள்ளது. ஸ்டீவியா செடி இந்தியாவில் பயிரிடப்பட உள்ளது.இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Sunday, July 11, 2010

மக்கள் தொகை... 2050-ல் சீனாவை விஞ்சும் இந்தியா !


கடந்த 100 ஆண்டுகளில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ள இந்திய மக்கள் தொகை, 2050-ல் சீனாவை விஞ்சும் என்று அரசு கணித்துள்ளது.இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்பான அரசின் ஆய்வறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் தொகை 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் சீனாவின் மக்கள் தொகை பெருக்கத்தின் சதவீதம் 0.6 மட்டுமே என்பது கவனத்துக்குரியது.கடந்த 2009-ல் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 119.8 கோடி. அப்போது, சீனாவின் மக்கள் தொகை 134.5 கோடி.பாகிஸ்தானின் மக்கள் தொகை 18 கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில், பாகிஸ்தானின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.2 ஆக இருந்திருக்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகை 2050வது ஆண்டில் 161.38 கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில், சீனாவின் மக்கள் தொகை 141.7 கோடியை அடைந்திருக்கும்.மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் 'ஜனசக்திய ஸ்திர்தா கோஷ்' ஆய்வறிக்கையின்படி, இப்போது காணப்படுகின்ற வேகத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி நீடித்தால், அடுத்த 50 ஆண்டுகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கை இரு மடங்கு ஆகக் கூடும் என்று தெரிகிறது.

தவற விடாதீர் தமிழக அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவி

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது.இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது

1 - 10 வகுப்பு வரை

தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல் நகல் (xerox)
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஜூலை 15
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 5

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
புதுப்பிக்கும் மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்


11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)

தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஜூலை 31
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 15

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்


தொழிற்படிப்புகள் ( Engineering )


தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்


மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm

Saturday, July 10, 2010

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம் !

திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.

திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.

''நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்'' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً

''நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்'' (அல்குர்ஆன் 4:19)

இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். இது எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் - மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா என்ன?
அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான். 'நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும்.எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.

''இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.

''பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது - அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.

இதுபோல் தான், பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.

இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை.அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.

இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.இனிய இல்லறத்தில் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் பல உள்ளன. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான்.

மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும். ஆண் வர்க்கத்துக்கு அல்லாஹ் கூறும் அறிவுரையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும்!

இன்சாட்-4பி செயற்கை கோளில் மின்சார கோளாறு: டிவி- தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு


இன்சாட்-4பி செயற்கைக் கோளுக்கு மின் சக்தி வழங்கும் சோலார் பேனல்களில் ஒன்று பழுதாகி விட்டதால், இந்தியாவில் சில டி.வி. சேனல்களின் ஒளிபரப்பும், சில தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.தொலைத்தொடர்பு மற்றும் டி.வி. சேனல்கள் ஒளிபரப்புக்காக பல்வேறு டிரான்ஸ்பான்டர்களுடன் கூடிய இன்சாட்-4பி செயற்கைக் கோள் கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்த இந்த 3 டன் எடை கொண்ட செயற்கைகோளின் ஆயுள்காலம் 12 ஆண்டுகள் ஆகும். அதில், 'க்யூ-பேண்ட்' டிரான்ஸ்பாண்டர்கள் 12, 'சி-பேண்ட்'டிரான்ஸ்பாண்டர்கள் 12 என மொத்தம் 24 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.இந்த செயற்கைக் கோளுக்கான மின் சக்தியை வழங்க, இரண்டு சோலார் பேனல்கள் உள்ளன. இவை சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றித் தருகின்றன.

இதில் ஒரு பேனலில் இருந்து மின்சாரம் உற்பத்தியாவது கடந்த 7ம் தேதி முதல் பாதிக்கப்பட்டது. இதனால், இன்சாட்-4பி செயற்கைக் கோளின் சக்தியானது 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது.இதனால் இப்போது 12 டிரான்ஸ்பாண்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. இதன்காரணமாக இந்த செயற்கைக் கோளை நம்பியிருந்த சேவைகள 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சில டி.வி. சேனல்கள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இன்சாட் ரக செயற்கைக் கோள்களில் மின்சாரப் பிரச்சனை ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இரு முறை இந்த வகையான கோளாறுகள் ஏற்பட்டு, அவை பயனற்றுப் போயுள்ளன.

வேலூர் வி.ஐ.டி. மாணவர்கள் ஏவிய ராக்கெட்:

இதற்கிடையே வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ரோஹினி-200 (ஆர்.எச்) என்ற ராக்கெட் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.விண்ணில் செலுத்தப்பட்ட 2 நிமிடத்தில் ராக்கெட் 60 கிலோ மீட்டர் தூரத்தை எட்டியது.இந்த ராக்கெட்டில் வளிமண்டல ஆய்வு குறித்த கருவிகள் இடம் பெற்றிருந்தன. ராக்கெட் தயாரிப்பதற்கான முழு செலவையும் வி.ஐ.டி.பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய, மற்றும் பாரசீக மதங்களை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வேண்டுவோர் பிளஸ் 1, பிளஸ் 2, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், டிப்ளமோ இன் நர்சிங், ஆசிரியர் பயிற்சி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு படிப்பவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களையும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

18 வயது பூர்த்தி அடையாத மாணவ, மாணவிகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயருடன் கூட்டுக் கணக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.இத்தகவல் சிறுபான்மை நல ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, July 7, 2010

ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன், ஜெர்மனி விமான நிலையங்கள் மறுப்பு.


ஈரான் நாட்டு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன்,ஜெர்மன், குவைத் நாட்டு விமான நிலையங்கள் மறுத்துள்ளன. அணு ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் ஈரானை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல வழிகளில் முயன்று வருகின்றன. பொருளாதார, தொழில்நுட்ப, பாதுகாப்பு, வர்த்தகத் தடைகள் விதித்தாலும் ஈரானின் அணு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

இந் நிலையில் ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் இல்லை என்று கூறி அடுத்த ஆயுதத்தை பிரயோகம் செய்துள்ளன இந்த நாடுகள்.இதன்மூலம் ஈரான் நாட்டு விமானத்துறையை சீர்குலைக்கவும்,அதன் வருவாயைத் தடுக்கவும் முயற்சி செய்யப்படுவதாகத் தெரிகிறது.ஈரான் மீதான இந்த விமான எரிபொருள் தடைக்கு மேலும் பல நாடுகளின் ஆதரவைப் பெறவும் முயற்சி நடக்கிறது.

அதே போல ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என்று ஐரோப்பாவில் உள்ள தனது பெட்ரோலிய பங்குகளுக்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் ஷெல் நிறுவனம் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளன.தங்களது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என்று ஈரான் ஏர்லைன்ஸ் யூனியனின் செயலாளர் மெஹ்தி அலியாரி கூறியுள்ளார். இதற்கிடையே தங்கள் விமானங்களுக்கு தடை விதித்த நாடுகளின் விமானங்கள், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப மாட்டோம் என்று ஈரான் நாட்டு மூத்த அரசியல் தலைவரான ஹெஸ்மதுல்லா பலாஹத்பிசே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்க காங்கிரஸ் கொண்டு வந்த மிகக் கடுமையான தீர்மானத்தில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டார்.அதன்படி,ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கலாம்.

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் வலியுறுத்தல்.


தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில்,முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நடந்தது.மாநாட்டின் முதல் நிகழ்வாக, முஸ்லிம்கள் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி, சென்னை புதிய தலைமைச் செயலகம் அருகே துவங்கி, தீவுத்திடலில் முடிந்தது.

தீவுத்திடலில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது: நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளதை குஷ்வந்த்சிங் போன்ற சிந்தனையாளர்கள் வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அதை முஸ்லிம் மதகுருமார்கள் புறக்கணித்தனர்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆங்கிலேயர் வழங்கிய வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் மறுத்தனர். தாங்கள் வகித்து வந்த உயர் பதவிகள் மற்றும் ஆங்கிலேயர் கொடுத்த சர் ராவ்பகதூர் போன்ற பட்டங்களையும் புறக்கணித்தனர்.

கடந்த 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது.கடந்த ஆண்டு, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, நாட்டில் உள்ள 13 சதவீத முஸ்லிம்களுக்கு, கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இப்பரிந்துரையை உடனடியாக சட்டமாக்க வேண்டும்.இதுதொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ஜெய்னூல் அபிதீன் பேசினார்.