திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.
திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.
''நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்'' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً
''நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்'' (அல்குர்ஆன் 4:19)
இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். இது எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் - மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா என்ன?
அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான். 'நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும்.எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.
''இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.
''பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது - அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.
இதுபோல் தான், பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.
இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை.அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.
இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.இனிய இல்லறத்தில் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் பல உள்ளன. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான்.
மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும். ஆண் வர்க்கத்துக்கு அல்லாஹ் கூறும் அறிவுரையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும்!
Saturday, July 10, 2010
இன்சாட்-4பி செயற்கை கோளில் மின்சார கோளாறு: டிவி- தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு

இன்சாட்-4பி செயற்கைக் கோளுக்கு மின் சக்தி வழங்கும் சோலார் பேனல்களில் ஒன்று பழுதாகி விட்டதால், இந்தியாவில் சில டி.வி. சேனல்களின் ஒளிபரப்பும், சில தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.தொலைத்தொடர்பு மற்றும் டி.வி. சேனல்கள் ஒளிபரப்புக்காக பல்வேறு டிரான்ஸ்பான்டர்களுடன் கூடிய இன்சாட்-4பி செயற்கைக் கோள் கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்த இந்த 3 டன் எடை கொண்ட செயற்கைகோளின் ஆயுள்காலம் 12 ஆண்டுகள் ஆகும். அதில், 'க்யூ-பேண்ட்' டிரான்ஸ்பாண்டர்கள் 12, 'சி-பேண்ட்'டிரான்ஸ்பாண்டர்கள் 12 என மொத்தம் 24 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.இந்த செயற்கைக் கோளுக்கான மின் சக்தியை வழங்க, இரண்டு சோலார் பேனல்கள் உள்ளன. இவை சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றித் தருகின்றன.
இதில் ஒரு பேனலில் இருந்து மின்சாரம் உற்பத்தியாவது கடந்த 7ம் தேதி முதல் பாதிக்கப்பட்டது. இதனால், இன்சாட்-4பி செயற்கைக் கோளின் சக்தியானது 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது.இதனால் இப்போது 12 டிரான்ஸ்பாண்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. இதன்காரணமாக இந்த செயற்கைக் கோளை நம்பியிருந்த சேவைகள 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் சில டி.வி. சேனல்கள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இன்சாட் ரக செயற்கைக் கோள்களில் மின்சாரப் பிரச்சனை ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இரு முறை இந்த வகையான கோளாறுகள் ஏற்பட்டு, அவை பயனற்றுப் போயுள்ளன.
வேலூர் வி.ஐ.டி. மாணவர்கள் ஏவிய ராக்கெட்:
இதற்கிடையே வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ரோஹினி-200 (ஆர்.எச்) என்ற ராக்கெட் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.விண்ணில் செலுத்தப்பட்ட 2 நிமிடத்தில் ராக்கெட் 60 கிலோ மீட்டர் தூரத்தை எட்டியது.இந்த ராக்கெட்டில் வளிமண்டல ஆய்வு குறித்த கருவிகள் இடம் பெற்றிருந்தன. ராக்கெட் தயாரிப்பதற்கான முழு செலவையும் வி.ஐ.டி.பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய, மற்றும் பாரசீக மதங்களை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வேண்டுவோர் பிளஸ் 1, பிளஸ் 2, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், டிப்ளமோ இன் நர்சிங், ஆசிரியர் பயிற்சி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு படிப்பவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களையும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
18 வயது பூர்த்தி அடையாத மாணவ, மாணவிகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயருடன் கூட்டுக் கணக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.இத்தகவல் சிறுபான்மை நல ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வேண்டுவோர் பிளஸ் 1, பிளஸ் 2, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், டிப்ளமோ இன் நர்சிங், ஆசிரியர் பயிற்சி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு படிப்பவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களையும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
18 வயது பூர்த்தி அடையாத மாணவ, மாணவிகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயருடன் கூட்டுக் கணக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.இத்தகவல் சிறுபான்மை நல ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, July 7, 2010
ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன், ஜெர்மனி விமான நிலையங்கள் மறுப்பு.

ஈரான் நாட்டு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன்,ஜெர்மன், குவைத் நாட்டு விமான நிலையங்கள் மறுத்துள்ளன. அணு ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் ஈரானை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல வழிகளில் முயன்று வருகின்றன. பொருளாதார, தொழில்நுட்ப, பாதுகாப்பு, வர்த்தகத் தடைகள் விதித்தாலும் ஈரானின் அணு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
இந் நிலையில் ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் இல்லை என்று கூறி அடுத்த ஆயுதத்தை பிரயோகம் செய்துள்ளன இந்த நாடுகள்.இதன்மூலம் ஈரான் நாட்டு விமானத்துறையை சீர்குலைக்கவும்,அதன் வருவாயைத் தடுக்கவும் முயற்சி செய்யப்படுவதாகத் தெரிகிறது.ஈரான் மீதான இந்த விமான எரிபொருள் தடைக்கு மேலும் பல நாடுகளின் ஆதரவைப் பெறவும் முயற்சி நடக்கிறது.
அதே போல ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என்று ஐரோப்பாவில் உள்ள தனது பெட்ரோலிய பங்குகளுக்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் ஷெல் நிறுவனம் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளன.தங்களது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என்று ஈரான் ஏர்லைன்ஸ் யூனியனின் செயலாளர் மெஹ்தி அலியாரி கூறியுள்ளார். இதற்கிடையே தங்கள் விமானங்களுக்கு தடை விதித்த நாடுகளின் விமானங்கள், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப மாட்டோம் என்று ஈரான் நாட்டு மூத்த அரசியல் தலைவரான ஹெஸ்மதுல்லா பலாஹத்பிசே தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்க காங்கிரஸ் கொண்டு வந்த மிகக் கடுமையான தீர்மானத்தில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டார்.அதன்படி,ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கலாம்.
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் வலியுறுத்தல்.

தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில்,முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நடந்தது.மாநாட்டின் முதல் நிகழ்வாக, முஸ்லிம்கள் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி, சென்னை புதிய தலைமைச் செயலகம் அருகே துவங்கி, தீவுத்திடலில் முடிந்தது.
தீவுத்திடலில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது: நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளதை குஷ்வந்த்சிங் போன்ற சிந்தனையாளர்கள் வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அதை முஸ்லிம் மதகுருமார்கள் புறக்கணித்தனர்.
காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆங்கிலேயர் வழங்கிய வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் மறுத்தனர். தாங்கள் வகித்து வந்த உயர் பதவிகள் மற்றும் ஆங்கிலேயர் கொடுத்த சர் ராவ்பகதூர் போன்ற பட்டங்களையும் புறக்கணித்தனர்.
கடந்த 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது.கடந்த ஆண்டு, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, நாட்டில் உள்ள 13 சதவீத முஸ்லிம்களுக்கு, கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இப்பரிந்துரையை உடனடியாக சட்டமாக்க வேண்டும்.இதுதொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ஜெய்னூல் அபிதீன் பேசினார்.
Wednesday, June 30, 2010
பிரதமர் மான்மோகன் சிங்கின் பொருளாதார பேச்சுக்களை உலகமே கவனிக்கிறது-ஒபாமா புகழாரம்.

டொராண்டோ: பொருளாதாரம் தொடர்பாகவும், பிற உலக விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மன்மோகன்சிங் கூறும் கருத்துக்களை உலகமே ஆர்வமாக கவனிப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். மேலும், தான் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவிருப்பதை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் கனடா சென்றுள்ளார். இந்த மாநாட்டின் போது அமெரிக்க அதிபரை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சர்வதேச பொருளாதாரம், பயங்கரவாதம் மற்றும் பொருளாதார தேக்க நிலை பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்.இந்த சந்திப்புக்கு முன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஒபாமா கூறியதாவது:நான் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு செல்லவிருப்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிரதமர் மன்மோகன்சிங் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக உலகிற்கு முன் மாதிரியாக இருக்கிறது. இந்திய கலாச்சாரம் செழுமையானதாக உள்ளது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆவலாக உள்ளேன். பொருளாதார துறையில் பிரதமர் மன்மோகன்சிங் ஆழ்ந்த அறிவுள்ளவர் என்பதால் அவர் பேசும்போது உலகமே ஆர்வத்தோடு கவனிக்கிறது. இந்திய-அமெரிக்க உறவுக்கு புதிய பொருள் கொடுக்க ஆவலோடு உள்ளேன் என்று அவர் கூறினார்.
முன்னதாக மன்மோகன்சிங் பேசும்போது அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்தியா சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் மாற்றம் கொண்டுவர என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறது என்பதை ஒபாமா இந்த பயணத்தின் போது நேரிலேயே பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா போல் இந்தியாவிலும் புகைப்பட அடையாள அட்டை மற்றும் அடையாள எண் வழங்கபடுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட அனைவருக்கும், புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். கணக்கெடுப் பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம் என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை, பெசன்ட் நகரிலுள்ள ராஜாஜி பவனில், கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 15ம் தேதி வரை, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெறும். இப்பணியில், 1 லட்சத்து 50 ஆயிரம் களப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இரண்டாவது கட்டமாக, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின் போது, வீடு அமைப்பு விவரம் மற்றும் குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, "டிவி,' கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் உள்ளதா என்ற விவரம் சேகரிக்கப்படும்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் விவரங்களில், தனி நபர் பெயர், அவர் படித்த ஊர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரமும் பெறப்படும். அதன்பின் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். பதினைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்கள் மற்றும் கைரேகை பதிவுகளை சேகரிக்கும் பணியும் நடைபெறும். அடுத்த ஆண்டில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். அதோடு, பிரத்யேக அடையாள எண்களும் வழங்கப்படும்.
கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு கணக்கெடுக்க வரும்போது, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்தால், தாசில்தார், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் கொடுத்தால், மற்றொரு நாளில் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுக்க வருவர். வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம் பெற மாட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால், மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்து கொள்ளலாம்.கணக்கெடுப்பில் இலங்கை, பர்மா அகதிகள் இடம் பெறுவர். கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.
Monday, June 28, 2010
செம்மொழி மாநாட்டில் கலாமும் பங்கேற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்-தமுமுக

உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கருத்துரை இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளரும், தமுமுக மாநில தலைவருமான ஜவாஹிருல்லா இதுகுறித்துக் கூறுகையில்,
கம்யூட்டரில் தமிழை பயன்படுத்துவதற்கு உரிய மென்பொருளை (தமிழ் யூனிகோடு) உருவாக்கி அனைவருக்கும் இலவசமாக வழங்கியவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினத்தை சேர்ந்த உமர்தம்பி. மறைந்துவிட்ட அவர் நினைவாக செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கம் அமைக்க வேண்டும் என முதல்வரிடம் மனு கொடுத்தோம். அதன்படி மாநாட்டில் உமர்தம்பி ஆய்வரங்கம் அமைக்கப்பட்டது. இதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உமர்தம்பியின் பணிகளை பாராட்டி அவர்கள் குடும்பத்திற்கு சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் விருது வழங்கினார்.
கணிணி தமிழ் ஆய்வுப்பிரிவு துவக்க வேண்டும் என பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் வலியுறுத்தினார். அப்பிரிவுக்கு உமர்தம்பியின் பெயர் சூட்ட வேண்டும். வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், திருக்குறளை உதாரணம் காட்டி பேசுபவர் முன்னாள் ஜானதிபதி அப்துல் கலாம். நம் நாடு அறிவியல் துறையில் வளர்ச்சி பெற பாடுபட்டவர் அவர். அவரை மாநாட்டிற்கு அழைத்திருக்க வேண்டும். அவரது கருத்துரை செம்மொழி மாநாட்டில் இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.
நன்றி : thatstamil.com
Sunday, June 27, 2010
"இதயத்தை பாதுகாக்க யோசனைகள்"

அப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள்.
குறிப்பாக இந்த பக்கத்தில் "இதயத்தை பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர். அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன்.
"இதயத்தை பாதுகாக்க யோசனைகள்"
***********
1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.
2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.
3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.
4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.
5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.
6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.
7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.
8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.
9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.
10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.
11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.
12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.
13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.
15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).
16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.
17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !
18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.
19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.
20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்
21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.
22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.
23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.
24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்
25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.
26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.
27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.
28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்
29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.
30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.
Wednesday, June 23, 2010
அப்துல் கலாம் புறக்கணிப்பா - செம்மொழி மாநாட்டில் வெடித்தது முதல் சர்ச்சை

தமிழர்களின் பெருமை மிகு மாநாடாக செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அதிர்ந்து போகிறார்கள்.உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களை ஏன் அழைக்கவில்லை என்ற வினா பூதாகாரமாக எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழக அளவில் உள்ள அனைத்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். அல்லது வரவழைகப் பட்டுள்ளனர்.ஆனால் அப்துல் கலாம் ஏன் வரவில்லை? அப்துல் கலாம் திட்டமிட்டு புறக்கனிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.அப்துல் கலாம் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்து வருவது குறித்து மாநாட்டு பொறுப்பாளர்கள் விளக்கம் அளிக்க மறுத்து வருகின்றனர்.
அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் மீடியாக்கள் அவரைச் சுற்றியே வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள். குழந்தைகளும் மாணவர்களும் அவரோடு பேசப் போட்டி போடுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட நிகழ்ச்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. எனவேதான் அப்துல்கலாமை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.
நன்றி : இந்நேரம்.காம்
கஸா நிவாரண உதவி கப்பல் படுகொலை சரியானதே - இஸ்ரேல் !!

உலகை நடுக்கிய, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தி 9 பேரைப் படுகொலை செய்தச் செயலை இஸ்ரேல் நியமித்த விசாரணைக் குழு நியாயப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது."சூழ்நிலைக்கு ஏற்றவாறே இஸ்ரேலிய இராணுவம் சமூகச் சேவகரைச் சுட்டுக்கொன்றது" என்றும் "அச்சம்பவத்தில் பிழையேதுமில்லை" என்றும் இஸ்ரேலிய கப்பல் படை நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
அதே சமயம், ஃபலஸ்தீனர்களுக்கு உதவி கொண்டு வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் எடுத்துக்கொண்ட முன்னேற்பாடுகளில் பல பிழைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. "இராணுவம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை; தேவையான உளவு தகவல்கள் சேகரிக்கவில்லை; துப்பாக்கிச் சூடு நடத்தும் முன்னர் தண்ணீர் பாய்ச்சியடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை உபயோகித்தும் கப்பலில் இருந்த சமூக சேவகர்களைக் கைது செய்வதற்கு முயற்சி செய்யவில்லை; இராணுவ உடை அணிந்திருக்கவில்லை" முதலியவைகளை இஸ்ரேலிய இராணுவம் செய்தத் தவறுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
துருக்கியைத் தலைமையாகக் கொண்டுப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எம்.பிக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் அடங்கிய ஃபலஸ்தீன் நிவாரண கப்பல், கஸாவை நெருங்கும் முன் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இஸ்ரேலிய இராணுவம் தடுத்து நிறுத்திக் கப்பலில் உள்ளவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 9 பேரைக் கொன்றதோடு, ஃபலஸ்தீன் அகதிகளுக்குச் சென்ற நிவாரண உதவிப் பொருட்களையும் கையகப்படுத்தியது. சர்வதேசச் சட்டங்களை மீறிய இஸ்ரேலின் இந்தச் செயல்பாட்டினைக் குறித்துச் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பை இஸ்ரேல் அங்கீகரிக்காமல், இஸ்ரேலிய கப்பல் படையினைக் கொண்டு அச்சம்பவத்தைக் குறித்து விசாரித்து அறிக்கைத் தரக் கேட்டுக் கொண்டது எனப்து குறிப்பிடத்தக்கது.
சவூதியில் தயாராகும் முதல் கார்

ரியாத் : முழுக்க முழுக்க சவூதியிலேயே தயாராகும் முதல் காரை மன்னர் சவூத் பல்கலைகழக விஞ்ஞானிகளின் உருவாக்கியுள்ளனர். பாலைவன மானான கஜலை நினைவுபடுத்தும் விதத்தில் கஜல்1 என்று பெயரிடப்பட்டுள்ளன காரை மன்னர் அப்துல்லா பார்வையிட்டார்.
பாலைவன சூழலுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இக்கார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலைவனம் உள்ளிட்ட எல்லா சாலைகளிலும் பயன்படுத்த கூடிய வகையிலும் உள்ளே பயணிகளுக்கு எல்லா வித செளகரியங்களும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக சவூத் பல்கலைகழக பேராசிரியர் சையத் தார்விஷ் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே சவூதி அரேபியா வழமையான எண்ணைய் உற்பத்தியை சார்ந்திருப்பதிலிருந்து பிற துறைகளில் முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் வளைகுடாவில் சிறப்பான முறையில் பங்களிக்க முயற்சிக்கின்றது. ஆண்டுக்கு 20,000 கார்கள் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முதல் முஸ்லீம் வீரர் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் காஜா என்பவர் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் முஸ்லீம் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில்தான் உஸ்மான் இடம் பிடித்துள்ளார்.முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி இது. இதில் இடம் பெற்றுள்ள உஸ்மானுக்கு 23 வயதாகிறது. இடது கை பேட்ஸ்மேன் ஆவார்.காயமடைந்துள்ள பிலிப் ஹ்யூக்ஸுக்குப் பதிலாக உஸ்மானுக்கு இடம் கிடைத்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்காக உஸ்மானுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஆண்ட்ரூ ஹிட்லிட்ச் கூறுகையில், சிறப்பாக விளையாடியதற்காக உஸ்மானைத் தேர்வு செய்துள்ளோம். எந்த வரிசையில் இறக்கினாலும் சிறப்பாக விளையாடக் கூடியவராக இருக்கிறார் உஸ்மான். எனவே அவருக்கு இடம் கிடைத்துள்ளது என்றார்.உஸ்மான் காஜா, 1986ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, June 20, 2010
25 டெராபைட்ஸ் டைட்டானியம் ஆக்ஸைட் சூப்பர் டிஸ்க் அறிமுகம்..

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அதிக சேமிக்கும் (கொள்ளவு) இடம் கொண்ட ஒரு பிரத்யேக டிஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.இதைப் பற்றிய சிறப்பு பதிவு. எளிதாக எங்கும் எடுத்துசெல்ல சிடி, டிவிடி டிஸ்க் வந்த போதும் மிக மிக அதிக அளவு கொள்ளவு கொண்ட ஒரு பிரத்யேக டிஸ்க் ஒன்றை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் சேமிக்கும் அளவு 25 TB சற்று விரிவாக பார்ப்போம்.
8 Bits = 1 Byte
1024 Bytes = 1 Kilobyte (KB)
1024 Kilobytes = 1 Megabyte (MB)
1024 Megabytes = 1 Gigabyte (GB)
1024 Gigabytes = 1 Terabyte (TB )
இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் CD யின் சேமிப்பு இடம் 700 MB ,அதே போல் இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் DVD-யின் சேமிப்பு இடம் 4.7 GB. தற்போது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த டிஸ்க்-ன் சேமிப்பு இடம் 25 TB. இந்த டிஸ்க் டைட்டானியம் ஆக்ஸைடு மெட்டிரியல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒளிக்கற்றைகளை இந்த டிஸ்க் -ன் மீது செலுத்தி தகவல்களை சேமிக்கின்றனர் ஒளிக்கற்றைகளை செலுத்தும் போது வெவ்வேறு வண்ணம் மூலம் இங்கு சேமிக்கப்படுகிறது. இதனால் இங்கு தகவல்களை சேமிக்கும் நேரமும் எடுக்கும் நேரமும் மிகக் குறைவாகத்தான் ஆகும். இதன் விலையும் அதிகமாக இருக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
Thursday, June 17, 2010
துபாயில் தலைமறைவான கீழக்கரை வாலிபர்

துபாய்: துபாயில் வேலை பார்க்க வந்த சில மாதத்திலேயே வேலை பிடிக்கவில்லை என்று கூறி விட்டு தலைமறைவான நபர், துபாயிலேயே தலைமறைவாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரை நம்பி கீழக்கரையில் வசித்து வரும் அவரது அப்பாவித் தந்தையும், தங்கையும், அந்த நபர் திரும்பி வர மாட்டாரா என்ற பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
அவரது பெயர் எச். சுல்தான் அஹமது காசிம். 29 வயதாகிறது. துபாயில் உள்ள ஈடிஏ நிறுவனத்தில் ஒர்க்கர் பணியில் 3 வருடத்திற்கு முன்பு சேர்ந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.தனக்கு வேலை பிடிக்கவில்லை என்றும், ஊருக்குப் போகப் போவதாகவும் சக ஊழியர்களிடம் கூறியிருந்தாராம். இதை தனது தந்தைக்கும் கூறியுள்ளார். ஆனால், பெருமளவில் பணத்தை செலவு செய்து அனுப்பியுள்ளோம், அது திரும்பக் கிடைக்கும் வரையாவது வேலை பார் என்று அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டு துபாயிலேயே இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அதன் பின்னர் சுல்தான் அஹமது பெற்றோரைத் தொடர்பு கொள்ளவில்லை.
மாறாக தற்போது சோனப்பூர், அல்கூஸ், ஜபேல் அலி போன்ற கேம்புகளில் உலாவி வருவதாகவும், அஜ்மானில் உள்ள சில குதிரைக்கு புல் போடும் இடத்திலும் சுற்றி வருவதாக தகவல்கள் வருகின்றன.இவர் வீட்டிற்கு தொடர்பு கொள்வதோ, பணம் அனுப்புவதோ கிடையாது, இவரை எப்படியாவது தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்படி துபாயில் வசிக்கும் பல பேர்களை அணுகியும் யாரும் உதவி செய்யவில்லை என்று வருத்ததுடன் இவரது தாய் தந்தையர் தெரிவிக்கிறார்கள்.
நிறுவனத்தை அணுகி விசாரித்ததில் இவரை கொண்டு வந்தால் போதும் பயணச் சீட்டு எடுத்து ஊருக்கு அனுப்பிவிடலாம் என்று தெரிவிக்கிறார்கள்.எனவே சுல்தான் அஹமதை யாரேனும் எங்காவது பார்த்தால், கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்.
துபாய்- முஜிப் : 050 -8660154
பாலா- 050 -2120277
சுல்தானின் பெற்றோரைத் தொடர்பு கொள்ள:
S.ஹமீது இப்ராஹீம்
நூர்ஜஹான் எலெக்ட்ரிகல்ஸ்
கீழக்கரை
போன்: 00914567 - 244640
செல்போன்: 0091 -9382293637
நன்றி : thatstamil.com
சிங்கப்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு-பல லட்சம் பொருட்களுக்கு சேதம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சிறு வியாபாரிகள் அதிகம் உள்ள பகுதியான ஆர்ச்சர்ட் சாலையில், கன மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து, வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.இந்த வெள்ளத்தில் வெளிநாட்டு பொருட்கள் பெருமளவில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் வழக்கமாக சிங்கப்பூரில் பெய்யும் மழையின் அளவில் 60 சதவீத அளவு, அதாவது 101 மில்லிமீட்டர் மழை ஒரே நாளில் பெய்ததால் வந்த வினை இது. இந்த பெரு மழையால் சிங்கப்பூரின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஆர்ச்சர்ட் சாலை வணிக வளாகங்கள்தான்.இந்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பல விலை உயர்ந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக சிறு வியாபாரிகள் குமுறியுள்ளனர். தங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள மழை நீர் வடிகால் வசதிகள் சரியில்லாததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.கடுமையான வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் துணி விற்பனையகமான மாஸிமோ துத்தி, ஹெர்ம்ஸ் பொத்திக் ஆகியவையே.கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில்லை என்கிறார்கள் வியாபாரிகள்.
சேத மதிப்பு குறித்து முழுமையாகத் தெரியவில்லை. வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னர்தான் அதை மதிப்பிட முடியும் என சிங்கப்பூர் சிறு வியாபாரிகள் சங்கம் மற்றும் ஆர்ச்சர்ட் வர்த்தக சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன.கன மழையில் சிக்கி பல்வேறு வணிக வளாகங்களுக்குக் கீழ் உள்ள கார் பார்க்கிங்குகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்களும் கூட சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, June 15, 2010
தங்கம், லித்தியம், தாமிரம், கோபால்ட் : உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'ஸ்மெல் பண்ணவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.
இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரில் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.
'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.
ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.
அப்பா கஷ்டத்தை நினைத்து படித்தேன்..ஜாஸ்மின்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 495 மார்க் எடுத்த, மாநிலத்தின் முதல் மாணவி ஜாஸ்மின்: சின்ன வயசில இருந்தே, நான் நன்றாக படிப்பேன். அப்பா, எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சார். அதனால, அவர் அடிக்கடி பேசும்போது, "நன்றாக படிக்கணும்மா... படித்தால்தான் குடும்பம் முன்னேற முடியும்... வேற எந்த நினைப்பும் உங்களுக்கு வேண்டாம்... படிக்கிற வயசுல ஒழுங்கா படிச்சா பிற்காலம் சந்தோஷமாக இருக்கும்'னு, சொல்லுவார். அது ரொம்ப உண்மைன்னு இப்பத் தெரியுது. நான் நன்றாக படித்ததால், எங்களின் இந்த சிறிய வீட்டைத் தேடி அமைச்சர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள்ன்னு, பலதரப்பட்ட பெரியவர்கள் வந்து, வாழ்த்திட்டுப் போறாங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
அப்பா காலைல எம்-80 பைக்ல துணிகளை எடுத்துக் கட்டிட்டு கிளம்புவாங்க. அப்ப நாங்க உதவி செய்வோம். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமம் கிராமமா போய் வியாபாரம் பார்ப்பாங்க. சில நேரம் இரண்டு நாள் கழிச்சுதான், திரும்பி வருவாங்க. "கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைக்கிறாங்களே'ன்னு, மனசுல வச்சுக்கிட்டே படிச்சேன். நான் மாநிலத்தில் முதல் மார்க் வாங்குனதுல என்னை விட எங்க அம்மா, அப்பாதான் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அப்பா வியாபாரம் செய்யப்போகும் பல கிராம மக்கள், பேப்பர்ல எங்க குடும்பப் படத்தைப் பார்த்துட்டு, அப்பாவுக்கு போன் பண்ணி வாழ்த்துச் சொன்னாங்க. அது மறக்க முடியாத சம்பவம்.
அண்ணன் இம்ரான், "குடல் இறக்கம்' என்ற நோயால் அவதிப்பட்டார். உடனே ஆபரேஷன் செய்யணும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. அந்தச் சமயம் அண்ணனுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு. எக்ஸாமா? ஆபரேஷனா? என பிரச்னை வந்தது. "எனக்கு நீதான்டா முக்கியம். எக்ஸாம் அப்புறம் எழுதிக்கலாம்'ன்னு, உடனே ஆபரேஷன் செய்யச் சொல்லிட்டார் அப்பா. இனிமேல் அவன் படிக்கிறேன்னு சொன்னது எனக்கு சந்தோஷமா இருக்குது.
Sunday, June 13, 2010
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை..

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்டகால கனவான ஓட்டு போடும் உரிமை நிறைவேற இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது. இதற்கான அடிப்படை பணிகள் ஒரளவுக்கு முடிந்து காபினட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் இந்த சட்டம் முழுமை பெறும்போது இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்களாக மாறுவர். டில்லியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றும் இவர்களுக்கு கவுரவிக்கும் வகையில் ஓட்டுரிமை கிடைக்க வழி செய்யப்படும் என்று அறிவித்தார். இதன்படி தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு அமைச்சர் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியன் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சிலால், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த குழுவின் ஒப்புதல் மத்திய காபினட் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் . பின்னர் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் அங்கீகாரம் பெற்று முழுமை பெறும்.
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வயலார் ரவி கூறுகையில்; இந்த சட்ட முன்னேற்பாடு அனைத்து பணிகளும் தயாராகி விட்டன. வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஜனநாயக கடமையை பூர்த்தி செய்வதன் மூலம் இந்திய வளர்ச்சிக்கு துணையாக இருக்க முடியும் என்றார்.
படிப்பு மற்றும் பணி காரணமாக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கும் ஓட்டு பட்டியலில் பெயர் நீடித்து இருக்க சில சலுகைகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு விடும் , வரும் லோக்சபா தேர்தலில் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ஓட்டு போட ரெடியாகிடுங்க !
Wednesday, June 9, 2010
மீண்டும் பன்றி காய்ச்சல்: மும்பையில் 3 பேர், கேரளாவில் ஒருவர் பலி: பலர் பாதிப்பு

மும்பை& கொல்லம்: மும்பையிலும் கொல்லத்தில் பன்றி காய்ச்சல் (ஸ்வைன் ப்ளூ) பரவியுள்ளது. இதனால் 4 பேர் பலியாகியுள்ளனர்.கொல்லத்தில் சீரன், ராக்கி, கிரிதர் மற்றும் மருத்துக் கல்லூரி மாணவர் ஒருவர் உள்பட 7 பேர் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஷ்ணு, பிந்து, நசீம் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.இக்காய்ச்சல் தாக்கி குண்டரை பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருவனந்தபுரம் கிங்ஸ் மருத்துவமனையில் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ராஜூ கூறும்போது இக்காய்ச்சல் தாக்குதல் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்ந்தால் மட்டும் குணப்படுத்த இயலும். பலர் தனியார் மருத்துவமனைக்கு போய் வி்ட்டு இங்கு வருகின்றனர் என்றார்.
கேரளாவில் பன்றி காய்ச்சலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏராளமானோர் பரிசேதனைக்காக அரசு மருத்துவனைகளில் குவிந்து வருகின்றனர்.
அதே போல மகாராஷ்டிரத்திலும் ஸ்வைன் ப்ளூ பரவி வருகிறது. கடந்த 16 நாட்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.மும்பையில் 27 வயதான கர்ப்பிணியும், ஒரு வயது குழந்தையும், 25 வயது பெண்ணும் பலியாகியுள்ளனர்.கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பின் மீண்டும் ஸ்வைன் ப்ளூ தாக்குதல் தொடங்கியுள்ளது.
" யா அல்லாஹ் இக்கொடிய நோயிலிருந்து அணைத்து மக்களையும் காப்பாற்றுவாயாக"
Subscribe to:
Posts (Atom)